
கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடிப்பில் திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது ‘லோகா அத்தியாயம் 1: சந்திரா’ திரைப்படம்.
இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருக்கிறார். 100 கோடி வசூலை அள்ளிய முதல் ஃபீமேல் சென்ட்ரிக் சூப்பர் ஹீரோ திரைப்படம் என்கிற பெருமையும் இந்தப் படத்திற்கு கிடைத்திருந்தது. தற்போது 200 கோடிக்கு மேலான வசூலைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.
கள்ளியன்காட்டு நீலியாக தொடங்கியிருக்கும் இதன் முதல் அத்தியாயத்தின் இறுதியில் துல்கர் சல்மான், டொவினோவின் கதாபாத்திரங்களும் அடுத்தடுத்த பாகத்திற்கான தொடர்ச்சிக் கதைகளுக்கு அடித்தளமிட்டுச் சென்றிருக்கின்றது. மூத்தோனாக மம்மூட்டி நடிப்பதாகவும் எதிர்பார்ப்பை எகிறவைத்திருகிறது.
இதையடுத்து தற்போது இதன் இரண்டாம் அத்தியாயத்திற்கான அப்டேட் வெளியாகியிருக்கிறது. 2 நிமிட வீடியோவாக வெளியாகியிருக்கும் அதில், டொவினோ, துல்கர் இருவரும் அடுத்த அத்தியாயத்தின் கதை யாருடையது என்று பேசுகின்றனர்.
அவர்களின் உரையாடலில் அடுத்த அத்தியாயம் டொவினோவின் கதையை மையப்படுத்தியதாக இருக்கிறது. டொவினோவிற்கு 389 சகோதரர்கள் இருப்பதாகவும், அவர்களுடன் பிரச்னை இருப்பதாகவும், டொவினோவின் மூத்த சகோதரன் பெரும் சக்திகொண்ட சாத்தானாக டொவினோவை பழி தீர்க்க வருவதாகவும் அந்த வீடியோவில் கூறப்படுகிறது. டொவினோ கல்யாணியை ‘அவள் என்னுடையவள்’ என்று போட்டி நிறைந்த ஆசையை வெளிப்படுத்துகிறார்.
டொவினோவிற்கு உதவி தேவைப்பட்டால் துல்கர் உடனே வருவதாகவும் வாக்குக் கொடுக்கிறார். கலகலப்பாக, சூப்பர் பவர், சுறுசுறுப்பு குறையாத வேகத்துடன் இருக்கும் டொவினோவும், அவருக்கு எதிராக வரும் மூத்த சகோதரரும், 389 சாத்தன் சகோதரர்கள் கூட்டமுமாக கதைக்களம் அமைவதாக எதிர்பார்ப்பு விதையைத் தூவியிருக்கின்றனர் படக்குழு.
இந்த ‘Lokah Chapter 2’ பற்றிய அறிவிப்பு வீடியோ எப்படி இருக்கிறது, அடுத்த கதை எப்படி இருக்கும் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்!