
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், படப்பையை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று மணிமங்கலம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், காதல் ஜோடியை மிரட்டியுள்ளது. பின்னர் இளைஞரிடம் எங்க ஏரியா பெண்ணிடம் நீ எப்படி பழகலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன்பிறகு அந்தக் கும்பல், வில்லிவாக்கம் இளைஞரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதோடு இளைஞரை மிரட்டி ஆன்லைன் மூலம் 10,000 ரூபாயை பறித்திருக்கிறது. மர்ம கும்பல் தாக்கியதில் காயமடைந்த இளைஞர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து வில்லிவாக்கம் இளைஞர், மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் தாம்பரம் துணை கமிஷனர் பவன்குமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுந்தர், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு ஆகியோர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆன்லைன் மூலம் பணத்தை மிரட்டி வாங்கியது சதீஷ் எனத் தெரியவந்தது. பின்னர் சதீஷைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ்வரன், அருண் உள்பட சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதில் சதீஷ் மீது கொலை வழக்கு உள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.