
சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 4,510 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.150 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சர்வதேச, ஆசிய, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து, 819 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். பணியின்போது காலமான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பணியாளர்களின் வாரிசுகளான எஸ்.தீபா, ஆர்.தினேஷ், எம்.தினேஷ்குமார், பி.ஹரிஷ் ஆகிய 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.