
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதியில் பேசிய அவர்,
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல். இன்னும் ஆறு மாதம்தான் தி.மு.க.வின் ஆயுள் காலம். தி.மு.க ஆட்சிக்கு வென்டிலேட்டர் வைக்கப்பட்டுள்ளது. வரும் 2026-ல் நடைபெற இருக்கும் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் உள்ள கூட்டணிதான் பெருவாரியாக வெற்றி பெறும்.
அ.தி.மு.க-விற்கு வரக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்திப் பங்குபெறாமல் செய்வதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால், அதனையும் மீறி இன்று இவ்வளவு மக்கள் குவிந்துள்ளார்கள்.
சிறந்த நடிகர்
செந்தில் பாலாஜி எப்படிப்பட்டவர் என்று கரூர் மக்களுக்குத் தெரியும். அவர் நடிப்பிலேயே சிறந்த நடிகர் சிவாஜி கணேசனையே மிஞ்சிவிட்டார். அவர் இருந்திருந்தால் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பார்.
செந்தில் பாலாஜி பல்வேறு வேஷம் போடுவார். புது யுக்திகளை கையாள்பவர். செந்தில் பாலாஜி ஐந்து கட்சி இல்லை, தேர்தல் முடிந்த பிறகு எந்த கட்சிக்கு செல்வார் என்று தெரியாது. செந்தில் பாலாஜி வரவுள்ள தேர்தல் வரை இருப்பாரா என்று கூட தெரியவில்லை.
கல்விக்கு முன்னுரிமை
நேற்றைய தினம் கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்று ஸ்டாலின் கொண்டாடுகிறார். ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் தான் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு பல்வேறு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க ஆட்சியில் பல்வேறு பள்ளிகள் மூடுகின்றனர்.
100 நாள் வேலை பணியாளர்கள் நீக்கம்
அ.தி.மு.க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100 நாள் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி விட்டதாக கேள்விப்பட்டேன்.
உடனடியாக வேலை வழங்கி விடுங்கள். இல்லை என்றால் நீதிமன்றத்திற்கு சென்று உங்களுக்கு தக்க தண்டனை பெற்றுத் தரப்படும்.

எல்லாம் கொள்ளையடித்த பணம் தான்
2026 – ல் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி பல்வேறு அவதாரங்களை எடுப்பார். வெள்ளிக் கொலுசு கூட கொடுப்பார். எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளுங்கள்.
அது எல்லாம் கொள்ளையடித்த பணமாகும். அவர் தங்கம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், வாக்குகளை மட்டும் இரட்டை இலைச் சின்னத்திற்குப் போடுங்கள்.
வரும் 2026- ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களியுங்கள்” என்றார்.
இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த மசூதியில் தொழுகை சத்தம் கேட்டவுடன் பேச்சை 5 நிமிடம் நிறுத்திவிட்டு தொழுகை முடிந்த பிறகு மீண்டும் பேச ஆரம்பித்து பேசி முடித்தார்.