
Doctor Vikatan: பல வீடுகளிலும் வெங்காயம் என்பது அன்றாட சமையலில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. வெங்காயத்தில் சல்பர் தவிர வேறு சத்துகள் இருக்கின்றனவா, வெங்காயத்தைச் சுவைக்காகச் சேர்த்துக்கொள்கிறோமா அல்லது அதில் உண்மையிலேயே மருத்துவ குணங்கள் உள்ளனவா, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டில் எது பெஸ்ட்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்
வெங்காயத்தை வெறும் சுவைக்காகவோ, மணத்துக்காகவோ மட்டும் சமையலில் சேர்ப்பதில்லை. அதற்கென பிரத்யேக மருத்துவக் குணங்கள் இருப்பதை மறுக்க முடியாது.
வெங்காயத்தில் நார்ச்சத்து மிக அதிகம். தவிர அதில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி தன்மையானது, உடலில் புண்கள் வந்தால் ஆற்றுவதற்கு உதவும். பொட்டாசியம் சத்தும், வைட்டமின் சி சத்தும் இதில் அதிகம். ஃபோலேட் எனப்படும் இரும்புச்சத்தும் இதில் உண்டு.
சின்ன வெங்காயத்துக்கும் பெரிய வெங்காயத்துக்கும் ஊட்டச்சத்துகளில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. எந்த வெங்காயமாக இருந்தாலும் அதைச் சமைத்துச் சாப்பிடும்போது, அதிலுள்ள வைட்டமின் சி சத்து வீணாகிவிடும். எனவே, வெங்காயத்தை பச்சையாக சாலடாக சாப்பிடுவதுதான் சிறந்தது.

வெங்காயத்துக்கு ரத்தம் உறைதலைத் தடுக்கும் பிளட் தின்னிங் தன்மையும் உண்டு. வெங்காயத்தில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ், புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.
புற்றுநோய் சிகிச்சையில் இருப்போருக்கு, குறிப்பாக, பேலியேட்டிவ் கேர் சிகிச்சையில் இருக்கும்போது அவர்களுக்கு வெங்காயம் சேர்த்த உணவுகள், சாலட் போன்றவை கொடுப்பது சிறந்தது. வெங்காயத்தில் உள்ள கிளிசரைடு எனப்படும் சத்தானது, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலில் பூஞ்சைத்தொற்று ஏற்படாமல் காக்கும். அதனால்தான் பொடுகு உள்ளவர்களுக்கு, இன்ஃபெக்ஷன் பாதித்தவர்களுக்கெல்லாம் வெங்காயச் சாறு பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.