• September 27, 2025
  • NewsEditor
  • 0

விசாரணையில் உயிரிழந்த சிறுவன்

மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவரின் மகன் முத்து கார்த்திக் என்ற 17 வயதுச் சிறுவனை கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இந்த விசாரணையின்போது கடுமையாகத் தாக்கியதில் படுகாயம் அடைந்து முத்து கார்த்திக் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தீர்ப்பு!

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு

தன் மகன் இறப்புக்குக் காரணமான மதுரை எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜெயா வழக்கு தொடர்ந்தார். இவருக்கு சட்ட உதவியை மதுரை மக்கள் கண்காணிப்பகம் வழங்கியது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட, மதுரை எஸ்.எஸ் காலனி காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ், காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார்.

Lockup Death
Lockup Death | காவல் மரணங்கள்

மேலும், சாட்சிகளை, ஆதாரங்களை அழிக்க முயன்றதாக ஆய்வாளர் பிரேமசந்திரன், சார்பு ஆய்வாளர் கண்ணன், ஆய்வாளர் அருணாசலம் ஆகிய மூவரையும் இந்த வழக்கில் சேர்த்து, விசாரணை நடத்தி கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டார்.

ஆய்வாளர் பிரேமசந்திரன், சார்பு ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ஓய்வுபெற்ற நிலையில், தற்போது ஆய்வாளராகப் பதவியில் உள்ள அருணாசலத்தைச் சஸ்பெண்ட் செய்யவும், உடற்கூராய்வின்போது காயங்களை மறைத்து அறிக்கை அளித்த அரசு மருத்துவர் ஜெயக்குமார், மருத்துவ அலுவலர் ஸ்ரீலதா மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *