• September 27, 2025
  • NewsEditor
  • 0

நந்திதேவர் சாபம் தீர்த்த தலம்

ஒருமுறை, மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டத்துக்குச் சென்றார் நந்திதேவர். ஆனால், துவாரபாலகர்களான ஜயனும் விஜயனும் அவரைத் தடுக்க… அதையும் மீறி நந்திதேவர் உள்ளே செல்ல முயன்றார். இதனால் கோபம் கொண்ட இருவரும், நந்தியை சபித்தனர். இதால் அவருக்கு தேகமெங்கும் தோல் நோய் உண்டானது.

உடனே சிவனாரிடம் முறையிட்டார் நந்திதேவர். அப்போது ஈசன், ”திருமகள் கடும் தவம் இருந்து, திருமாலின் இதயத்தில் இடம்பிடித்த தலமான நாதன்கோவிலுக்குச் சென்று தவம் செய்தால், சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும்” என வழிகாட்டினார் சிவபெருமான்.

ஸ்ரீராமர்

அதன்படி, இந்தத் தலத்துக்கு வந்த நந்திதேவர், திருமாலை எண்ணிக் கடும் தவம் மேற்கொண்டார். இதில் மகிழ்ந்த பெருமாள் அவருக்குத் திருக்காட்சி தந்ததுடன், சாபத்தையும் போக்கியருளினார். அப்போது திருமாலிடம் நந்திதேவர்,

”என்னைப் போலவே தோல் நோயால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து தங்களைத் தரிசித்தால், அந்த நோயைத் தாங்கள் தீர்த்தருள வேண்டும். இதன் நினைவாக, இந்தத் திருத்தலம் அடியேனின் பெயரால் அழைக்கப்படவேண்டும்” என வேண்டுகோள் விடுக்க… ‘அப்படியே ஆகட்டும்’ என அருளினார் பெருமாள்.

அதன்படி, இங்கே வந்து வேண்டிக்கொண்டால் தோல் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இங்கே, மனித உருவில் நந்திதேவர் கருவறையிலேயே தரிசனம் தருவது சிறப்பு.

மங்களாசாசனம் பாடிய திருமங்கையாழ்வார்

இப்படிப்பட்ட அற்புதமாக கோயிலை உருவாக்கியவர் ராஜராஜப் பெருவுடையார். அந்த அளவுக்கு, ஈசன் மீது எல்லையற்ற பக்தி கொண்டிருந்தார் மன்னர். இருப்பினும், தன் தேசத்து மக்களுக்காகவும், சைவமும் வைணவமும் இணைந்து தழைக்க வேண்டும் என்பதற்காகவும் அற்புதமான வைணவ ஆலயம் ஒன்றைக் கட்டினார் அவர்.

இந்த ஆலயம் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது நாதன்கோவில். ராஜராஜசோழன் எழுப்பிய இந்தக் கோயிலில் இருந்தபடி இன்றைக்கும் அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் பெருமாள்.

இங்கு, மூலவரின் திருநாமம் – ‘ஸ்ரீவிண்ணகரப் பெருமாள்; ஸ்ரீநாகநாதர்’ என்றும் அழைப்பர். கருவறையில், இவருக்கு முன்னே, ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீபூதேவியுடன் ஸ்ரீஜெகந்நாதபெருமாள் எனும் திருநாமத்துடன் உற்சவரும் காட்சி தருகிறார்.

ஸ்ரீபிரம்மா, திருமாலின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அற்புதத் தலம் இது. ‘நாளும் நந்தி பணி செய்த விண்ணகரம் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே’ என்று, மங்களாசாசனம் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார்.

மனித உருவில் நந்தி கருவறையில்
மனித உருவில் நந்தி கருவறையில்

ஸ்ரீமகாலட்சுமி தவம் செய்த தலம்

ஒருமுறை தாயார் பெருமாளிடம் “என்னை உங்கள் மார்பில் ஏற்றுக்கொள்ளுங்கள்” என வேண்டுகிறாள்.

பெருமாள் அதற்கு “நீ பூலோகத்திற்குச் சென்று எனக்காகக் காத்திரு, நான் அங்கு வந்து உன்னை ஏற்றுக்கொள்கிறேன்” என்கிறார்.

அதன் படி தாயாரும் இந்த பழையாறை நந்திபுரத்திற்கு தை அமாவாசை நாளன்று வந்து செண்பகவல்லி தாயாராக ரூபம் கொண்டு பெருமாளையே எண்ணிக் காத்திருக்கிறாள்.

தாயாருக்குக் கொடுத்த வாக்கின் படி பெருமாள் ஜெகந்நாதனாக உருவம் பெற்று ஐப்பசி மாதம் வெள்ளிக்கிழமை (அதாவது ஐப்பசி மாத அஷ்டமி) நாளன்று தாயாரை தன்னோடு சேர்த்துக்கொள்கிறார்.

பெருமாள் தாயாரை ஏற்றுக்கொண்ட நாளான ஐப்பசி மாத அஷ்டமி நாளை ஒவ்வொரு ஆண்டும் அஷ்டமி திருவிழாவாக இந்தக் கோயிலில் கொண்டாடுகின்றனர்.

திருமாலின் இதயத்தில் இடம்பிடிக்க, செண்பக மரத்தடியில் ஸ்ரீமகாலட்சுமி தவம் செய்த தலம் இது என்பதால், இங்குள்ள மரத்தடியில் ஸ்ரீசெண்பகவல்லித் தாயாராக, கிழக்குப் பார்த்த சந்நிதியில், தபசுத் திருக் கோலத்தில் காட்சி தருகிறாள் தாயார்.

சுக்லபட்ச அஷ்டமி வழிபாடு

சுக்லபட்ச அஷ்டமி நாளில், இங்கு ஸ்ரீசூக்த ஹோமம் சிறப்புற நடைபெற்றுகிறது. தொடர்ந்து எட்டு சுக்லபட்ச அஷ்டமி நாள்களில் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீசூக்த ஹோமத்தில் பங்கேற்று, ஸ்ரீசெண்பகவல்லித் தாயாரை தரிசித்து வணங்கினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; திருமணத் தடை அகலும்; கஷ்டங்கள் யாவும் விலகும்; சந்திர மற்றும் பித்ரு தோஷங்கள் நீங்கும்; லட்சுமி கடாட்சமாக வாழலாம் என்பது ஐதிகம்.

பொன்னியின் செல்வன் நாவலில் வரும்..

கல்கி தன் பொன்னியின் செல்வன் நாவலில் இத்தலத்தில் தான் ஆழ்வார்கடியான் குந்தவை தேவியையும் செம்பியம் மாதேவியையும் வானதி தேவியையும் சந்திப்பதாக எழுதியிருப்பார்.

ஸ்ரீசெண்பகவல்லித் தாயார்
ஸ்ரீசெண்பகவல்லித் தாயார்

வந்தியத்தேவன் குந்தவை பிராட்டியைச் சந்திக்க வந்த நாளன்று கிருஷ்ண ஜயந்தி. திருவிழாக் கோலமாக பழையாறையில் இருக்கும் நந்திபுர விண்ணகர கோயிலைச் சுற்றியே அனைத்து விழாக்களும் நடைபெறும்.

அந்தக் கோயிலின் வாசலில் நின்றுதான் ஆழ்வார்க்கடியான், ‘கண்டேன் கண்டேன் கண்டேன் கண்ணுக்கினியானை கண்டேன்’ என்று பாடி சலசலப்பை ஏற்படுத்துவார். அதைக் கண்டே செம்பியன் மாதேவியும் குந்தவை தேவியும் வானதி தேவியும் ஆழ்வார்க்கடியானிடம் பேசுவார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *