
பொதுவாக, ஒரு துறையில் புதிய நிறுவனம் வரும்போது சிலபல அதிரடி சலுகைகளை அறிவித்து, வாடிக்கையாளர்களின் கவனத்தைப் பெற நினைக்கும்.
அந்த வகையில், மியூச்சுவல் ஃபண்ட் துறையில் சமீபத்தில் நுழைந்த ஜியோ பிளாக்ராக் நிறுவனம், தான் நிர்வகித்து நடத்தும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு எக்ஸிட் லோடு இல்லை என்று அறிவித்தது.
எக்ஸிட் லோடு என்பது ஒரு ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்யும்போது குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்ப எடுக்கும்போது விதிக்கப்படும் கட்டணம் ஆகும்.
உதாரணமாக, பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை ஓராண்டு காலத்துக்குள் திரும்ப எடுக்கும்போது 1% எக்ஸிட் லோடு கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்கும்போது எக்ஸிட் லோடு செலுத்த வேண்டும்.
ஆனால், சமீபத்தில் இந்தத் துறைக்கு வந்த ஜியோ பிளாக்ராக் நிறுவனம் தான் நிர்வகித்து நடத்தும் ஃபண்ட் திட்டங்களுக்கு எக்ஸிட் லோடு என்று அறிவித்ததைத் தொடர்ந்து, பிற ஃபண்ட் நிறுவனங்களும் தங்களது ஃபண்ட் திட்டங்களுக்கான எக்ஸிட் லோடு காலத்தைக் குறைத்திருக்கின்றன.
டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தனது பங்குச் சந்தை மற்றும் ஹைபிரிட் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை 30 நாள்களுக்குள் திரும்ப எடுத்தால், அதற்கான எக்ஸிட் லோடு கட்டணத்தை 0.50 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 30 நாள்களுக்குள் பணத்தைத் திரும்ப எடுத்தால், 0.25%, 90 நாள்களுக்குள் எடுத்தால் 0.1% என்கிற அளவுக்கு எக்ஸிட் லோடு கட்டணத்தைக் குறைத்துள்ளது.
இதே போல, சாம்கோ நிறுவனம் லார்ஜ் மற்றும் லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்டுகளுக்கான எக்ஸிட் லோட் காலத்தை ஒரு ஆண்டில் இருந்து 30 நாள்களாகக் குறைத்துள்ளது.
டி.எஸ்.பி. ஆர்பிட்ராஜ் ஃபண்டுக்கான எக்ஸிட் காலம் 30 நாளில் இருந்து 15 நாளாகவும், கோடக் பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்டுக்கான எக்ஸிட் லோட் காலம் ஒரு ஆண்டில் இருந்து 185 நாள்களாகவும், யு.டி.ஐ பேலன்ட்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்டுக்கான எக்ஸிட் லோடுக்கான காலம் ஒரு ஆண்டில் இருந்து 90 நாள்களாகவும் குறைக்கப்பட்டுள்ளன.
எக்ஸிட் லோடுகளுக்கான கால அளவையும் கட்டணத்தையும் குறைத்திருப்பது ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயம்தான். குறுகிய காலத்துக்குள் எதிர்பாராத வகையில் முதலீட்டைத் திரும்பப் பெற நினைப்பவர்கள், எக்ஸிட் லோடு என்கிற வகையில் சில ஆயிரங்களை இழப்பது இனி இருக்காது.

ஆனால், எக்ஸிட் லோடு கட்டணம் இனி பல ஃபண்ட் திட்டங்களில் இருக்காது என்கிற நிலையில், முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்தை அடிக்கடி திரும்ப எடுக்கும் நிலை உருவாகும். இதனால் நீண்ட நாள் முதலீடு என்கிற நோக்கம் அடிபட்டுப் போகும் வாய்ப்பு உள்ளது. இதனால் பவர் ஆஃப் காம்பவுண்டிங் பாதிப்புக்கு உள்ளாவதுடன், நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்கும் வாய்ப்பையும் இழக்க வேண்டிய நிலை உருவாகும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் எக்ஸிட் லோடு கட்டணம் இல்லை அல்லது குறைந்துவிட்டது என்பதற்காக பணத்தை அடிக்கடி எடுக்க நினைக்கக் கூடாது. நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் பெரும் பணத்தைச் சேர்க்க முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்!