• September 26, 2025
  • NewsEditor
  • 0

சட்டமன்றம் இல்லாமல் நேரடியாக மத்திய அரசின் கீழ் துணை நிலை ஆளுநரின் பார்வையில் இயங்கும் லடாக் யூனியன் பிரதேசத்தின் மக்கள், தங்களுக்கு மாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்பு பிரிவு 244-ன் கீழ் ஆறாவது அட்டவணையை லடாக்கிற்கு நீட்டிக்கக் கோரியும் நீண்ட நாள்களாக உரிமைக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதை வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் செப்டம்பர் 10 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 24) இளைஞர் குழு ஒன்று லே நகரில் பா.ஜ.க அலுவலகத்துக்கு தீ வைக்கவே போராட்டம் வன்முறையாக மாறியது.

Ladakh Violence – லடாக் வன்முறை

காவல்துறைக்கும் இளைஞர்கள் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் 20 வயதுக்கும் குறைவானவர்கள்.

ஒருபுறம், `போராட்டம் வன்முறையாக வெடித்ததற்கு முக்கிய காரணம் மக்களைத் தூண்டும் வகையில் சோனம் வாங்சுக் உரையாற்றியதுதான்’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்ட, மறுபக்கம் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை சோனம் வாங்சுக் முடித்துக்கொண்டார்.

லே நகரில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்றைக்கும் நீட்டிக்கப்பட்டது.

இவ்வாறிருக்க, இன்று (செப்டம்பர் 26) பிற்பகல் இரண்டரை மணியளவில் சோனம் வாங்சுக் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துவதாக இருந்தார். ஆனால், காவல்துறை தரப்பிலிருந்து அதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், லடாக் டிஜிபி எஸ்.டி. ஜம்வால் தலைமையிலான குழுவானது சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தற்போது கைதுசெய்திருக்கிறது.

இதனால், அரசியல் தலைவர்கள் பலரும் சோனம் வாங்சுக்கின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சோனம் வாங்​சுக்
சோனம் வாங்​சுக்

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “சோனம் வாங்சுக்கின் கைது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், ஆச்சரியமில்லை. இருப்பினும், மத்திய அரசு ஏன் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், லடாக் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஹனிஃபா, “தனது அமைதியான போராட்டத்துக்காக சோனம் வாங்சுக் கைதுசெய்யப்பட்டிருந்தால் அதை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *