
தமிழகத்தில் மிஷன் வாத்சல்யா திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் இத்திட்டத்தில் பணிபுரியும் 513 பணியாளர்கள் பணிப் பலன் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இதனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குழந்தைகள் நலன், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் நாடு முழுவதும் விரிவான ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் கடந்த 2012-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டம் 2021- 22ம் நிதியாண்டில் 'மிஷன் வாத்சல்யா' என்று பெயர் மாற்றப்பட்டு மத்திய அரசின் நிதியுதவி மூலம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டம் சிறார் பாதுகாப்பு, குழந்தைத் திருமணம் தடுப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சித்திரவதை ஆகியவற்றில் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் முன்னுரிமைகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை அடைவதற்கான ஒரு வழிகாட்டியாக உள்ளது.