• September 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை, சின்மையா நகர், வேதா நகரில் வசித்து வருபவர் நாரயணன் (35). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வரும் சாந்தகுமார் என்பவரிடம் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார்.

கோயம்பேடு மற்றும் பாரிமுனை பகுதிகளில் சாந்தகுமார் சொல்லும் கடைகளுக்குச் சென்று நாராயணன் பணத்தை வசூல் செய்து கொடுப்பது வழக்கம். அதன்படி 22.09.2025-ம் தேதி மாலை, பாரிமுனை பகுதியிலுள்ள கடைகளில் வசூல் செய்த 45,68,000 ரூபாயை பையில் வைத்துக் கொண்டு பைக்கில் நாராயணன், கோயம்பேடு வந்தார்.

காஜா முகைதீன்

அப்போது பைக்கில் வந்த இரண்டு பேர், நாராயணனின் பைக் மீது மோதினர். இதில் நாராயணன் பணப்பையுடன் கீழே விழுந்தார். உடனே அவரிடமிருந்த பணப்பையைக் கத்திமுனையில் பறித்துக் கொண்டு விபத்தை ஏற்படுத்திய இருவர் பைக்கில் தப்பிச் சென்றனர்.

அவர்களைத் தன்னுடைய பைக்கில் நாராயணன் துரத்திச் சென்றார். மதுரவாயல், கங்கா நகர் அருகில் பணத்தை வழிப்பறி செய்துக் கொண்டு தப்பிய இருவரை நாராயணன் மடக்கினார். அப்போது அவர்கள் கத்தியைக் காட்டி நாராயணனை மிரட்டினர். இருப்பினும் நாராயணன் அவர்களைப் பிடிக்க முயன்றபோது இருவரும் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு பணத்துடன் தப்பிச் சென்றனர்.

இதையடுத்து நாராயணன், கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தில் கிடைத்த பைக், சிசிடிவி பதிவுகளைக் கொண்டு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்கிற ரமேஷ் (24), காஜா முகைதீன் (26) என்பதைக் கண்டுபிடித்தனர்.

பின்னர் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஐ போன் உள்பட 3 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பணம் குறித்து ஐயப்பன், காஜா முகைதீனிடம் போலீஸார் விசாரித்த போது அவர்கள் அந்தப் பணம் எங்களிடம் இல்லை. வழிப்பறி செய்ய பிளான் போட்டுக் கொடுத்த சிலரிடம் இருப்பதாகத் தெரிவித்தனர். 

திருட்டு
திருட்டு

கைதான ஐயப்பன், பிராட்வே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். காஜா முகைதீன், பொழிச்சலூரில் ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இந்த வழிப்பறி சம்பவத்தின் பின்னணியில் இன்னும் சிலருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கைதான ஐயப்பனும் காஜா முகைதீனுக்குப் பின்னணியில் ஒரு நெட்வொர்க் உள்ளது. தனியார் நிறுவனத்திலும் ஆக்டிங் டிரைவர் வேலையிலும் போதிய வருமானம் கிடைக்காததால் ஐயப்பனும் காஜா முகைதீனும் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆடம்பரமாக வாழ வேண்டும் ஆசையில் தவறு செய்துவிட்டதாக விசாரணையின் போது எங்களிடம் தெரிவித்தனர்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *