
கோவை – கேரளாவின் எல்லைப் பகுதியில் உதயன் (ஷேன் நிகம்), குமார் (ஷாந்தனு) மற்றும் அவர்களுடைய நண்பர்கள் வசிக்கிறார்கள். அங்குச் சொந்தமாக ஒரு இறைச்சிக்கடையை உதயன் நடத்தி வருகிறார். வேலையைத் தாண்டி அவ்வப்போது நண்பர்களுடன் இணைந்து கபடியும் ஆடுகிறார்கள். பஞ்சமி ரைடர்ஸ் அணியில் விளையாடும் இவர்கள் பொற்றாமரை பைரவனின் (செல்வராகவன்) அணியைத் தோற்கடிக்கிறார்கள்.
கபடியில் சொல்லியடிக்கும் இந்த கில்லிகளின் திறமையறிந்து அவர்களை தன்னுடைய அணிக்காக விளையாட, பெரிய தொகையையும் கொடுத்து அழைப்பு விடுக்கிறார் பைரவன். கந்துவட்டி பிசினஸ் செய்து ஊர்மக்களை வஞ்சிக்கும் பைரவனுடன் கைகோர்க்கும் உதயன் மற்றும் குமாரின் வாழ்க்கை எப்படியெல்லாம் தடம் மாறுகிறது என்பதுதான் இந்த ஆக்ஷன் கலந்த ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தின் கதை.
நண்பனுக்காகத் துடிக்கும் பாசக்காரராகவும், கபடி ஆட்டத்தில் துணிச்சல்காரராகவும், ஆக்ஷன் களத்தில் சம்பவக்காரராகவும் தன்னுடைய 25-வது படத்திற்குப் பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார் ஷேன் நிகம். ரொமான்ஸ், சென்டிமென்ட் களத்திலும் பாயிண்ட்களை அள்ளுகிறார்.
நண்பர்கள்தான் முழு உலகம் எனச் சார்ந்து நிற்கும் இடம், பணத் தேவைக்காக அவசர முடிவுகளை எடுக்கத் தூண்டும் இடம், தடுமாற்றமான முடிவுகள், குழப்பங்கள் என ஷாந்தனு நடிப்பிற்கு ‘குட் பேட்ஜை’ வாங்கிக் குத்திக் கொள்கிறார். ஆனால், சில இடங்களில் கதாபாத்திரம் கோரும் பவர்ஃபுல் எக்ஸ்பிரஷன்ஸ் மிஸ்ஸிங் ப்ரோ! கதாபாத்திரத்திலும் ஆழமில்லாமல் போனதால், ஒரு கட்டம் வரை நமக்கு அந்நியமாகவே தெரிகிறார்.

குறைவான காட்சிகள் இருந்தாலும் அதில் ஜாலக்காரியாக மாயாஜாலங்கள் செய்கிறார் ப்ரீத்தி அஸ்ரானி. பென்சில் மீசை லுக், ஸ்டைலான உடல்மொழி எனக் கவனம் ஈர்க்கும் அல்ஃபோன்ஸ் புத்திரன், ஆக்ஷன் அவதாரத்தில் ஓகே ரகம்தான்.
வழக்கமான கந்து வட்டி வசூல் செய்யும் இருமுகம் கொண்ட வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன், தன் நைச்சிய நடிப்பால் கலகலப்பூட்டி புதுமை சேர்த்திருக்கிறார். கறாரான நடிப்பு மீட்டரை இறுக்கப் பிடித்திருந்தாலும் கதாபாத்திரத்தில் அழுத்தமில்லாததால் தாக்கம் தராமல் வந்து போகிறார் பூர்ணிமா இந்திரஜித்.
கோவை – கேரளா எல்லைப் பகுதியின் நிலப்பரப்பைப் படம்பிடித்த விதமும், இரவு நேர ஆக்ஷன் காட்சிகளில் அமைத்த சாஃப்ட் லைட்டிங்கும் ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜே.புலிக்கலின் மேஜிக்! ஷேன் நிகமின் கை மேனரிஸம் தொடங்கி இந்த ஆக்ஷன் படத்தின் ஸ்டன்ட் காட்சிகளுக்குச் சண்டைப் பயிற்சியாளர்கள் பெரும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள். கபடி வீரர்கள் என்பதால் அந்த விளையாட்டின் வடிவிலேயே சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருப்பது சுவாரஸ்யம்!

முதல் பாதி திரைக்கதையாகத் தேறினாலும், இரண்டாம் பாதி ரம்…..பமாக அறுத்துக் கொண்டே நீள்வது பெரும் சோகம். படத்தொகுப்பாளர் சிவகுமார் வி.பணிக்கர், இந்தப் பிரச்னைகளைக் களைந்து கொஞ்சம் சீர்படுத்தியிருக்கலாம்.
ஜாலக்காரி, பல்டி டைட்டில் பாடல் எனப் பாடல்களில் சாய் அபயங்கர் கொடுத்திருப்பது ஃப்ரஷ் வைப்! மென்மையான ஹம்மிங், பரபரக்கும் மாஸ் எனப் பின்னணி இசையிலும் 10000 ஆராவை கொண்டு அடித்தாடுகிறார் இந்த 2கே கிட்! திரைத்துறைக்கும் நல்வரவு!
துறு துறு கபடி ஆட்டம், மாஸ் கூட்டும் ஆக்ஷன் காட்சிகள் எனப் படத்தின் முதல் சில நிமிடங்கள் நம்மை என்டர்டெயின் செய்கிறது. மாஸ் காட்சிகளை அரங்கேற்றிய விதம் ஓரிரு இடங்களில் க்ளிக் அடித்தாலும் கதையில் அடர்த்தியில்லாததும், பெரும்பாலான காட்சிகளை மேம்போக்காக எழுதியதும் முதல் சுற்றிலேயே ஆட்டத்தைத் தடுமாறச் செய்திருக்கிறது.
படத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் மூன்று குழுக்களுக்குள் இருக்கும் மோதல் எத்தனை பெரிது, அவர்களுக்குள் இருக்கும் அந்தப் பகையின் தீவிரமென்ன என்பதை விளக்காதது போதாமையாகி இருக்கிறது. ஷாந்தனு மற்றும் பூர்ணிமா கதாபாத்திரங்களில் ஆழமில்லாததும், அல்ஃபோன்ஸ் புத்திரன் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் கதாபாத்திரத்தில் முழுமையில்லாததும் படம் ஆடியிருக்கும் ஃபவுல் ஆட்டங்கள்!

இறுதியில் அல்ஃபோன்ஸ் புத்திரனின் பாத்திரம் உயிருடன் இருக்கிறதா, ஒரு கட்டத்திற்கு மேல் காணாமல் போலும் ப்ரீத்தி அஸ்ரானி என்ன ஆனார் என எக்கச்சக்க லாஜிக் பள்ளங்களில் சிக்க வைத்து நம்மை ரிடையர்ட் ஹர்ட் ஆகிறது இரண்டாம் பாதி திரைக்கதை.
கத்தியைத் தொட்டவனின் விதி என்னவாகிறது, அதிலிருந்து விலகியவனின் எதிர்காலம் என்னவாகிறது என்கிற மெசேஜ் எல்லாம் ஓகேதான்… ஆனால், கொலைகள் செய்த நாயகன், எப்படி திடீர் போலீஸ் ஆனார் என்பதற்கு விளக்கம் தாருங்கள் நடுவரே!
தொழில்நுட்பத்தில் சிறப்பான பணியை மேற்கொண்டது போல, இறுக்கமான கதையாகக் கோர்த்து திரைக்கதையில் கூடுதல் கவனம் தந்திருந்தால் `பல்டி’ அடிக்கும் வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டிருக்காது!