
சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பாக கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்து ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வணிக வளாகம் கட்டுவதற்குப் பதிலாக அந்த இடத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்று செல்ல க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் காத்திருப்பு மையமாக அதை மாற்றியு்ள்ளதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டது. அதையடுத்து நீதிபதிகள் அதுதொடர்பான வரைபடம் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.