
புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் வீடு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்குவந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ‘‘கெஜ்ரிவாலுக்கு இன்று முதல் 10 நாட்களுக்குள் பொருத்தமான வீடு ஒதுக்கப்படும். இதை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை விரைவில் சுமூகமாக தீர்க்கப்படும் என்று டெல்லி துணைநிலை ஆளுநர் அண்மையில் கூறியதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து துஷார் மேத்தா இதனை தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா ஆஜரானார். கெஜ்ரிவாலுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வீட்டை காட்டிலும் வசதிக் குறைவாக வீட்டை ஒதுக்கக் கூடாது என அவர் வாதிட்டார்.