சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் செப்டம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு), வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் வணிகத் திருவிழா-2025’ நடைபெற உள்ளது.
இந்த விழாவில் 200-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், 300க்கும் மேற்பட்ட வேளாண் விளைபொருள்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் இடம்பெற உள்ளன. ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள், விதைப்பு முதல் அறுவடை வரையான வேளாண் கருவிகள், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனைத் துறை, கால்நடை, மீன் வளம் ஆகிய அரசுத் துறைகளின் அரங்குகளும் இடம் பெற உள்ளன.
விழாவின் ஒருபகுதியாக, வேளாண் விளைபொருள்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களின் விற்பனை, வணிகம், ஏற்றுமதி என்று பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். சென்னை மாநகர மக்கள் பயனடையும் விதமாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருள்களும் விற்பனைக்குக் கிடைக்கும்.

இத்திருவிழாவின் முதன்மை நோக்கம், விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சந்தை மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்குவதுதான்.
இந்த விழாவை நாளை (27.09.2025) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் . வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் திட்டங்கள் மற்றும் சாதனைகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன செயல்பாடுகள், மின்னணு சந்தைப்படுத்துதலின் முக்கியத்துவம், வேளாண் வணிகம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் ஆகியவை குறித்தான அரங்குகளும் இடம் பெற உள்ளன. இதைச் சார்ந்த கருத்தரங்குகளும் நடைபெற உள்ளன.
இரண்டாம் நாள் (28.09.2025) உணவே மருந்து, சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி அமைப்பான அபிடா, டி.என் அபெக்ஸ் ஆகியவற்றின் சார்பாக சந்தைப்படுத்துதல், நகர வாழ்வில் ஆரோக்கிய உணவு, சரிவிகித உணவு குறித்த கருத்தரங்கும் நடைபெற உள்ளது.
மேலும், உணவு பதப்படுத்துதல், காய்கறி சாகுபடி மற்றும் இயற்கை வேளாண்மை பற்றிய பயனுள்ள கருத்தரங்குகளும் இடம்பெற உள்ளன. விவசாயம் சார்ந்த விதைகள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருள்கள் விற்பனைக்குக் கிடைக்கும். அனைவரும் வருக. அனுமதி இலவசம்.