• September 26, 2025
  • NewsEditor
  • 0

1940களில் ஜப்பான் நாட்டின் டோக்யோ நகரில் தொடங்குகிறது கதை. அங்குள்ள சாமுராய்களுக்கும் இன்னொரு கேங்ஸ்டர்களுக்குமிடையே நடந்த சண்டையில் ஒரு இளைஞன் (பவன் கல்யாண்) மட்டும் தப்பித்து கப்பலில் செல்கிறான். அந்தக் கப்பலில் மும்பையில் சொந்தமாக ஒரு துறைமுகத்தை உருவாக்க நினைத்து தங்க பிஸ்கட்டுகளுடன் செல்கிறார் சத்யா தாதா (பிரகாஷ்ராஜ்).

They Call Him OG Movie Review

அங்கு அவருக்கு ஒரு பிரச்னை ஏற்பட, கப்பலில் இருந்த அந்த இளைஞன் சத்யா தாதாவின் உயிரைக் காப்பாற்றுகிறார். அவர் மனதில் இடம்பிடித்த அந்த இளைஞனை தன் கூடவே வைத்துக்கொள்கிறார், சத்யா தாதா. அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் பாதுகாவலராக, அவர் வீட்டில் ஒருவராக, சத்யா தாதாவின் நம்பிக்கையாக, அவரை எதிர்க்க நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் ஓஜஸ் கம்பீரா (OG).

‘ஊரையே உருதெரியாமல் ஆக்கின அந்த பெரும் புயலால கூட, அவன் வெட்டி வீசுனா ஆளுங்களோட ரத்தக்கறையை அழிக்கமுடியலை’ என்று சொல்லுமளவுக்கு பல சம்பவங்கள் செய்திருக்கும் ஓஜஸ் கம்பீரா, ஒரு நிகழ்வுக்குப் பிறகு, அந்தக் குடும்பத்திடம் இருந்து விலகிச் செல்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு, மும்பைக்கும் சத்யா தாதா குடும்பத்துக்கும் கம்பீராவின் வருகை தேவைப்படுகிறது. நிராயுதபாணியாக நிற்கும் சத்யா தாதாவின் குடும்பத்திற்காக ஓஜஸ் கம்பீரா ரத்தம் தெறிக்க தெறிக்க ஆடும் பவர்ஃபுல், ஹை ஆக்டேன் மார்ஷியல் ஆர்ட்ஸே இந்த ‘They Call Him OG’. ஓஜஸ் கம்பீரா கம்பீரமாக செய்த செய்கைகள் என்னென்ன, அந்தக் குடும்பத்திடமிருந்து விலக காரணம் என்ன, விலகி எங்கே என்ன செய்துகொண்டிருந்தார், அவருடைய ரீ எனட்ரி ஏன் தேவைப்படுகிறது ஆகியவற்றை மா…..ஸ் மசாலா என்டர்டெயினராக  சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுஜீத்.   

They Call Him OG Movie Review
They Call Him OG Movie Review

ஓஜஸ் கம்பீராவாக பவன் கல்யாண். பெயருக்கு ஏற்றாற்போல் கம்பீரமும் மாஸும் கலந்து அவருக்கே உரிய மேனரிஸத்தால் திரையை ஆள்கிறார். பவன் ஸ்லோ மோஷனில் நடந்து வந்தாலே அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள். இதில் அவர்களுக்கு முழு விருந்தே வைத்திருக்கிறார் இயக்குநர் சுஜீத். அவருக்குள் இருக்கும் ரசிகன் பல இடங்களில் எட்டிப்பார்த்து ஆடியன்ஸை ஆரவாரப்படுத்தியிருக்கிறார். ஸ்டன்ட் காட்சிகளில் பவன் பயங்கர பவர்ஃபுல்லாக தெறிக்கிறார். ‘நான் யார்னு என்ன கேட்குறதை விட வேற யார்கிட்டயாவது போய் அவர் யாருனு கேட்டுப்பாருங்க. அச்சச்சோ அவரா…பயங்கரமானவராச்சே! அவர்கிட்ட ஜாக்கிரதையா இருக்கப்பா’ என்ற காமெடி வசனத்தை மிகவும் சீரியஸாக மாஸ் தூக்கலாக சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றன வசனங்கள். உதாரணத்திற்கு, ‘When cyclone strikes, bow to the tide, When OG comes, go, run and hide’ என்ற வசனம். அதனால்தான் படத்தின் பெயர் OG என்றில்லாமல் ‘They Call Him OG’  என்று வைத்திருக்கிறார்கள் போல.

பவன் கல்யாணும் அவர் நிமித்தமும் என்றிருக்கும் படத்தில் அவர் ஜோடியாக பிரியங்கா மோகன் (கண்மணி). ஹீரோவின் வயலன்ஸ் போதும் கொஞ்சம் சைலன்ஸ் மோடுக்கு போவோம் என்ற சூழலில் இவரின் போர்ஷன் வருகிறது. குறைவான நேரமே வந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நன்றாகச் செய்திருக்கிறார், பிரியங்கா. எமோஷன் காட்சிகளில் எமோஷன் இல்லாதது பெரிய மைனஸ். தனது மிடுக்கான தோற்றம், சின்னச்சின்ன முகபாவனைகள் என தன் திரை அனுபவத்தை பக்குவமாக அந்தக் கேரக்டரில் பொருத்தி திரையில் கொண்டு வந்திருக்கிறார், பிரகாஷ்ராஜ். எலைட் கேங்ஸ்டராக பவன் கல்யாணுக்கு எதிராக நின்று மிரட்டியிருக்கிறார், இம்ரான் ஹாஸ்மி.

They Call Him OG Movie Review
They Call Him OG Movie Review

அர்ஜுன் தாஸுக்கு நல்ல கதாபாத்திரம். சிறுவயதில் இருந்து தனக்குள் இருக்கும் பழிவாங்கல் குணத்தை முகத்திலும் வசன உச்சரிப்பிலும் கடத்தி தனித்துத் தெரிகிறார். தவிர, ஸ்ரேயா ரெட்டி, ஹரிஷ் உத்தமன், சுதேவ் நாயர் ஆகியோர் கவனிக்க வைக்கின்றனர். ராகுல் ரவீந்திரன் நடித்த பத்ரா கதாபாத்திரம் ஆரம்பித்த விதம் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால், அதை ‘பவர் ஸ்டார் வஸ்துன்னாரு. கொஞ்சம் தள்ளி நில்லுங்க’ என்பது போல டீல் செய்யப்பட்டது நெருடல். ஓஜஸ் கம்பீரா கதாபாத்திரத்தை மெல்ல மெல்ல பில்டப் கொடுத்து சரியான மீட்டரில் எலிவேட் செய்தது் சூப்பர். ஆனால், அதன் பிறகு எங்கெங்கோ சென்று, சில பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் விட்டு மீண்டும் அதே கியரில் பயணிக்கத் தொடங்குகிறது திரைக்கதை.

அதீத மாஸ் படம் முழுக்க நிறைந்திருக்கிறது. ஆனால், எமோஷன் காட்சிகள் எடுபடவில்லை. ஒவ்வொரு கேரக்டரும் வடிவமைக்கப்பட்ட விதம் சிறப்பு. ஆனால், அவற்றை அடுத்தடுத்த கட்டத்திற்கு திரைக்கதையோடு சேர்த்து எடுத்து சென்றதில் சில குழப்பங்கள் இருக்கின்றன. சில காட்சிகள் மதுரையில் நடக்கிறது. அதை அப்படியே தொங்கலில் விட்டபடி சென்றுள்ளது திரைக்கதை. இவரின் முந்தைய படமான ‘சாஹோ’வை ஒரு காட்சியில் தொடர்புப்படுத்தி இருக்கிறார் சுஜீத்.

They Call Him OG Movie Review
They Call Him OG Movie Review

இயக்குநராக சுஜீத் தனக்கான பக்காவான டீமை வைத்துக்கொண்டு அதகளம் செய்திருக்கிறார். ரவி கே சந்திரன், மனோஜ் பரமஹம்சா என இரு ஒளிப்பதிவு ஜாம்பவான்கள் தங்களுக்கான பணியில் இறங்கி சிக்ஸர்களை பறக்க விட்டிருக்கின்றனர். ஸ்டன்ட் காட்சிகளில் கேமரா விளையாடியிருக்கிறது. செம ஸ்டைலிஷான விஷுவல்ஸால் திரையை அலங்கரித்திருக்கின்றனர். 

தமன் இசை இடியாய் படம் நெடுக முழங்குகிறது. பவன் கல்யாண், பாலையா படங்கள் என்றால் தமன் இறங்கி சம்பவம் செய்வார். அப்படியான ஒன்று இந்தப் படம். Hungry Cheetah, Firestrom, Guns and Roses என தன் அதிரடியான ஸ்வாக்கான இசையால் பவர் ஸ்டாருக்கு மேலும் பவர் கூட்டியிருக்கிறார். குடோஸ் தமன் காரு ! படத்தின் பெரும்பாலான பகுதி ஆக்ஷன் சீக்வென்ஸ்தான். அதை விஜய், பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, திலீப் சுப்பராயன், கெவின் குமார், சுனில் ரோட்ரிக்ஸ், கெச்சா கெம்பக்கடே, ஜுஜி, சுப்ரீம் சுந்தர், ஜாஷ்வா, பர்வேஸ் என இத்தனை ஸ்டன்ட் மாஸ்டர்களுக்கு படத்தில் கிரெடிட் கொடுத்திருக்கிறார்கள்.

இண்டர்வெல் ப்ளாக் சீனெல்லாம் கூஸ்பம்ஸ் மொமன்ட். ஹீரோயிஸம், ஸ்டண்ட், இசை, மாஸ், வசனங்கள், ஸ்டைலான மேக்கிங் என இந்த விருந்தில் வாவ் சொல்லும்படி பல விஷயங்கள் இருந்தாலும் எமோஷன் இல்லாதது, பல கேள்விகளுக்கு பதில் இல்லாதது போன்ற மைனஸ்களும் நிறைய இருப்பதால் பவன் கல்யாண் – சுஜீத் கொடுத்த OG விருந்தில் முழுமையில்லாமல் போகிறது.

மிகப்பெரிய மண்டபம், இசை கச்சேரி, நிறைய ஸ்டால்கள், பெரிய தாம்பூலப்பை என பிரமாண்டமாக நடக்கும் கல்யாணத்தில் சாப்பாடு சுமாராக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படியான உணர்வைக் கொடுக்கிறது ‘They Call Him OG’. 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *