
Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே மார்பகங்கள் பருத்துக் காணப்படும். உடல் பருமன் இருப்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறேன். எடையைக் குறைத்தால் மார்பகங்கள் தளர்ந்துபோகும் என்பது உண்மையா? அதனால் என் தோற்றமே மாறிப்போகுமா? தளர்ச்சியைச் சரியாக்க அறுவை சிகிச்சைதான் தீர்வா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
எடைக்குறைப்பு என்பது ஒட்டுமொத்த உடல் சம்பந்தப்பட்டது. உடலில் எங்கெல்லாம் கொழுப்பு இருக்கிறதோ, எடையைக் குறைக்கும்போது அங்கெல்லாம் கொழுப்பு குறைவது இயல்பு. மார்பகங்களும் அப்படித்தான்.
மார்பகங்கள் என்பவை சதைப்பகுதிகளால் ஆனவை. எனவே நீங்கள் சரியான பயிற்சிகளைச் செய்து, கொழுப்பைக் குறைக்கும்போது அவற்றின் அளவும் குறையும். மார்பக அளவுகளைக் குறைக்கவோ, கூட்டவோ என பிரத்யேகப் பயிற்சி எதுவும் இல்லை. தளர்ந்துபோன மார்பகத் தசைகளை எடை நிர்வாகத்தின் மூலம் ஓரளவு சரிசெய்யலாம்.
முதல் வேலையாக சரியான நிபுணரின் வழிகாட்டுதலோடு எடையைக் குறைத்து, பாஸ்ச்சரை சரிசெய்து, உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்றத் தொடங்கினாலே உடலளவில் உறுதியாக உணர்வீர்கள்.

எடை அதிகரிப்புக்கான காரணம் அறிந்து, அதைக் குறைப்பதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும். உங்களுடைய உணவுப்பழக்கம் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்.
முடிந்தால் ஃபிட்னெஸ் பயிற்சியாளரை நேரில் அணுகி, உங்களுக்கான எடைக்குறைப்புத் திட்டத்தை அமைத்துக்கொடுக்கச் சொல்லி, இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
உணவும் உடற்பயிற்சிகளும் முறைப்படுத்தப்பட்டாலே, உங்களுடைய உடலமைப்பு சரியாகும்.
அவசரப்பட்டு அறுவைசிகிச்சை முடிவுகளை எடுக்காதீர்கள். அதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
மார்பகங்களைத் தளரவிடாமல் உறுதியாக வைக்கவென்றே பிரத்யேக உள்ளாடைகள் உள்ளன. அவற்றையும் முயற்சி செய்யுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.