
கோவை சூலூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே சூலூரைச் சேர்ந்த அருண்குமார் (38). இவர் கபடி மற்றும் கைப்பந்து போட்டிகளுக்கான பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
அங்கு அவரிடம் ஏராளமானோர் பயிற்சி எடுக்கிறார்கள். அருண்குமார் சில பள்ளிகளுக்கும் சென்று மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பயிற்சிக்கு வரும் பள்ளி மாணவிகளிடம் அருண் பாலியல் ரீதியாக அத்துமீறி வன்கொடுமை செய்வதாகப் புகார் எழுந்தது. அந்தப் பள்ளியின் 9,10,12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் அருண் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மாணவிகள் தனியாக இருக்கும்போது அவர்களைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் 1098 குழந்தைகள் உதவி மையத்துக்கு அழைத்து புகார் சொல்லியுள்ளார்.

அதனடிப்படையில் விசாரணை நடத்தியதில் அருண் மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக கருமத்தம்பட்டி மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.