• September 26, 2025
  • NewsEditor
  • 0

மன்னார்கோவில்

திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மன்னார்கோவில்.

பசுமையும் எழிலும் கொஞ்சும் இந்த பூமியில் அமைந்துள்ளது சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பிரமாண்ட ஆலயம்.

இத்தலத்தில் பிருகு முனிவரும் மார்க்கண்டேய மகரிஷியும் தவமிருந்து பெருமாளை வழிபட்டு, அருள் பெற்றனர் என்கிறது தலபுராணம்.

வேதபுரி, ராஜேந்திர விண்ணகரம் என்றும் இத்தலம் முற்காலத்தில் அழைக்கப்பட்டது. காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே திருவரங்கம் திருத்தலம் இருப்பது போல், தாமிரபரணிக்கும் கடனா நதிக்கும் நடுவே அமைந்துள்ளது இந்தக் கோயில்.

ஸ்ரீகுலசேகர ஆழ்வார்

தனிச்சந்நிதியில் குலசேகர ஆழ்வார்

மேலும் குலசேகர ஆழ்வார், இத்தலத்து இறைவனை வழிபட்டு அவரின் பேரழகில் திளைத்து, இங்கேயே தங்கி கைங்கர்யங்கள் பலவற்றிலும் ஈடுபட்டு ஆலயத்தை நிர்வகித்தார் என்கிறது கோயில் வரலாறு. பிறகு இந்தப் பெருமாளின் திருவடிநிழலிலேயே பரமபதம் அடைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

இதற்கு சான்றாக ஆழ்வார் திருவாராதனை செய்த ஸ்ரீசீதாபிராட்டி, ஸ்ரீலட்சுமணன் மற்றும் ஸ்ரீராமனின் விக்கிரகத் திருமேனிகளை இன்றைக்கும் இந்தத் தலத்தில் உள்ளதை தரிசிக்கலாம்.

எனவே இங்கே குலசேகர ஆழ்வாருக்குக் கொடிமரத்துடன் கூடிய தனிச்சந்நிதி ஒன்று அமைந்துள்ளது, சிறப்பானது.

மூலவரான ஸ்ரீதேவி- பூதேவி சமேத வேதநாராயண பெருமாள், மூலிகைகளால் செய்யப்பட்ட வர்ணக் கலாப திவ்விய திருமேனியராக, சுதை வடிவில் தரிசனம் தரு கிறார்.

தனிக்கோயிலில் ஸ்ரீவேதவல்லித் தாயாரும், ஸ்ரீபுவனவல்லித் தாயாரும் காட்சி தருகின்றனர். இங்கே, பிருகு மற்றும் மார்க்கண்டேய முனிவர்களுக்குச் சந்நிதிகள் உள்ளன.

தலபுராணம்

பராந்தக சோழனுக்கு மனதில் இருந்த ஒரே குறை தன் தேசத்தை ஆள வாரிசு இல்லையே என்பதுதான்.

அப்போது முனிவர் ஒருவர் அவனின் மனக்குறையை அறிந்து அவனுக்கு அறிவுரை வழங்கினார். ‘தெற்கில் புண்ணிய நதியாம் பொருநை நதி பாய்கிற தேசத்தில், திருமாலுக்கு ஆலயம் எழுப்பி வழிபடு. குழந்தை பாக்கியம் கிடைக்கும்’ என அருளினார்.

அதன்படி தெற்கே வந்த சோழன் பொருநை நதியின் அழகிலும் இயற்கைச் சூழலிலும் மயங்கி அங்கேயே பெருமாளுக்கு ஓர் ஆலயம் எழுப்பியப் பணித்தான். அந்தப் பெருமாளுக்கு நாளும் சேவை செய்துவந்தவனுக்கு அடுத்த ஆண்டே பிள்ளை வரம் கிடைத்தது என்கிறது தலபுராணம்.

மன்னார்கோவில்
மன்னார்கோவில்

சோழன் எழுப்பிய இந்தக் கோயிலின் அஷ்டாங்க விமானம் தனி அழகு. மூன்று அடுக்குகளில், மூன்று விதமாகக் காட்சி தரும். பொதுவாக பெருமாள் சந்நிதிக்கு எதிரில் காட்சி தரும் கருடாழ்வார், இங்கே உத்ஸவருக்கு அருகில் காட்சி தருவது சிறப்பு என்கின்றனர், பக்தர்கள். இங்கு உற்சவரின் திருநாமம் ஸ்ரீராஜகோபால ஸ்வாமி.

மூலவர் சந்நிதிக்கு எதிரில் பிள்ளைத் தொண்டுப் பாதை உள்ளது. சிறிய துளை போன்ற இந்தப் பாதையில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் நுழைந்து, பெருமாளைப் பிரார்த்தித்தால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

மண்டப விதானத்தில், 12 ராசிகளுக்கும் உரிய கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீவேதநாராயணரை, புரட்டாசியில் வந்து வணங்கினால், கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கலாம். திருமணத் தடை அகலும்; வியாபாரம் சிறக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

நித்திய கருடசேவை பெருமாள்

மன்னார்கோவில் தலத்துக்குச் செல்லும் வழியிலேயே இருக்கிறது அம்பாசமுத்திரம் ஸ்ரீபுருஷோத்தமர் ஆலயம். இந்த ஆலயப் பெருமாளையும் சேர்ந்து தரிசிப்பது மிகவும் விசேஷம். ஸ்ரீ புருஷோத்தமப்பெருமாள் அபூர்வ திருமேனியுடையவர். பொதுவாக பெருமாளின் திருக்கரங்களில் ஒரு சங்கு ஒரு சக்கரம் மட்டுமே இருக்கும். ஆனால் அம்பாசமுத்திரம் ஸ்ரீ புருஷோத்தமருக்கோ கரங்களில் இரண்டு சங்கு இரண்டு சக்கரம் அமைதிருக்கும். எனவே இந்தப் பெருமாள் பக்தர்களைக் காத்து ரட்சிப்பதில் பெரியவர் என்றும் இவரை வணங்கினால் உடனே இன்னல்கள் தீரும் என்பது ஐதிகம்.

தாமிரபரணியின் வடகரையில், இந்திர விமானத்தின் கீழ் கருவறை கொண்டு சேவை சாதிக்கிறார் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள். கருடாழ்வார், தன்னுடைய வலது கரத்தில் திருமாலின் திருப்பாதத்தைத் தாங்கி நின்று காட்சி தரும் தலம் இது. எனவே, இங்கேயுள்ள பெருமாளை நித்திய கருட சேவை பெருமாள் என்றே போற்றுகின்றனர், பக்தர்கள்.

அம்பாசமுத்திரம் ஸ்ரீபுருஷோத்தமர்
அம்பாசமுத்திரம் ஸ்ரீபுருஷோத்தமர்

ஸ்ரீபுருஷோத்தமரை வணங்கும் பெண்கள், நல்ல குணமும் பேரன்பும் கொண்ட கணவரைப் பெறுவர் என்பது ஐதிகம்.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்ணின் ஜாதகத்தைப் பெருமாளின் திருவடியில் வைத்து வணங்கிவிட்டுப் பிறகு வரன் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அதேபோல், திருமணமானதும் தம்பதி சமேதராக இங்கு வந்து தரிசித்தால், இணை பிரியாமல் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *