• September 26, 2025
  • NewsEditor
  • 0

என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணிக்குள் விரிசல்

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அமைச்சரான பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார், தன்னுடைய லாட்டரி தொழில் குருவான மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை புதுச்சேரி அரசியலில் கடந்த ஆண்டு களமிறக்கினார்.

அத்துடன் தான் எம்.எல்.ஏ-வாக இருக்கும் காமராஜர் தொகுதியில், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிடுவார் என வெளிப்படையாக பேசி வருகிறார் ஜான்குமார்.

அதேபோல முதல்வர் ரங்கசாமியையும், அவர் தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார் சார்லஸ் மார்ட்டின். இது என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் அமைச்சர் ஜான்குமார்

“கடவுள் ரூபத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வந்திருக்கிறார்…”

இந்த நிலையில்தான் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் நடைபெற்ற புதுவை வணிகர்கள் உரிமை மாநாட்டில் பேசிய திருபுவனை சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன், “புதுவை மாநில வணிகர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக எந்த நன்மையும் நடக்கவில்லை.

2001-ல் புதுச்சேரியின் வளர்ச்சி எப்படி இருந்ததோ, அதே நிலைதான் இப்போதும் உள்ளது. புதுச்சேரி மாநிலம் ஊழலில் திளைத்துள்ளது. பல அரசு உயரதிகாரிகள் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்துள்ளனர். இந்த ஊழல் அரசு அகற்றப்பட வேண்டும்.

இந்த ஊழல் அரசை அகற்றுவதற்கான மிகப்பெரும் சக்தியாக ஜோஸ் சார்லஸ் வந்துள்ளார். புதுச்சேரி மாநிலத்துக்கு கடவுள் ரூபத்தில் ஜோஸ் சார்லஸ் வந்துள்ளார். அவர் மூலமாகத்தான் புதுச்சேரிக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது. வரும் 2026 தேர்தலில் பெரும் மாற்றம் வரும்.

“வணிகர்கள் ஆட்சி மாற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்…”

அதை மக்கள் எதிர்பார்க்கின்றனர். நல்லது செய்ய யாராவது வர மாட்டார்களா என மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஜே.சி.எம் மன்றம் மூலம் பணிகள் செய்வதை எழுத்துப் பூர்வமாக புகார் கொடுத்து தடுக்கின்றனர்.

நல்லது செய்ய முன்வாருங்கள், ஆனால் செய்யும் பணிகளை தடுக்காதீர்கள். புதுவை மாநிலம் மிகப்பெரும் ஆபத்தில் உள்ளது. வணிகர்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும். வணிகர்கள் ஆட்சி மாற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஜோஸ் சார்லசுக்கு பணம் சம்பாதிக்க வேண்டிய தேவையே இல்லை. அவருக்கு 100 தலைமுறைக்கு சொத்து உள்ளது. தற்போது அவரை வெளியூரைச் சேர்ந்தவர் என கூறுகின்றனர். நல்லது செய்ய எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை.

எம்.எல்.ஏ அங்காளன்

“இந்த அரசு துாக்கியெறியப்பட வேண்டும்…”

அவர் இந்தியர். அவரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும். ஆனால் ஏன் அவரை தடுக்கிறார்கள்? ஊழல் செய்து சொத்துக்களை சேர்த்துவிட்டு, மண்ணின் மைந்தன் என கூறுவதற்கு வெட்கமாக இல்லையா?

அரசால் சுத்தமான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க முடியவில்லை. சுகாதாரமற்ற குடிநீரை குடித்து 6 பேர் இறந்துள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு யாரும் சென்று ஆறுதல் கூறவில்லை. ஜோஸ் சார்லஸ் நேரில் சென்று ஆறுதல் கூறி, ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்.

அதனால் இந்த அரசு துாக்கியெறியப்பட வேண்டும். புதுவை மாநிலம் நல்ல வளங்களைப் பெற்ற மாநிலம். பாகூர் நெற்களஞ்சியமாக இருந்தது. ஆனால் இன்று அங்கு குடிநீருக்கே கையேந்த வேண்டிய நிலை உள்ளது. நிலத்தடி நீரை உயர்த்த மழை நீரை சேமிக்க வேண்டும்.

“ரூ.28 கோடி கையாடல்…”

ஏரி, குளங்கள், வாய்க்கால்களை துார்வார வேண்டும். அதை செய்வதற்காக இந்த மண்ணுக்கு வந்தவர், காவல் தெய்வம் ஜோஸ் சார்லஸ். புதுவை மாநிலத்துக்கு தொழில் கொள்கையை உருவாக்கி சிறந்த தொழில் நகரமாக உருவாக்க வேண்டும்.

சேதராப்பட்டு அரசு நிலத்தைக் கூறுபோட்டு விற்க நினைக்கின்றனர். தணிக்கை அறிக்கையில் ரூ.28 கோடி கையாடல் நடந்துள்ளது. ரூ.600 கோடி கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது ? அரசு மாநில இளைஞர்களை வஞ்சித்துவிட்டது. தொகுதி மக்களுக்கு என்ன தேவை என கேட்டது கிடையாது. அரசு பாரபட்சமற்ற அரசாக இருக்க வேண்டும். அதிகாரிகளிடம் கேட்டால், அதிகாரம் படைத்தவர்களிடம் இருந்து டார்ச்சர் வருகிறது என கூறுகின்றனர்.

முதல்வர் ரங்கசாமி

“ஆட்சியாளர்கள் வெளிநாட்டில் சொத்துகளை பதுக்குகிறார்கள்…”

புதுவை மாநில மக்கள் அனைவரும் ஒன்றுதான் என உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். புதுவை ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்து வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளனர்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை வேண்டும். அந்த மனப்பான்மையுடன் புதுவைக்கு சேவையாற்ற வந்துள்ள ஜோஸ் சார்லசை வரவேற்போம். புதுவை மாநிலத்தில் அவர் கேசினோ கொண்டு வர மாட்டார் என சத்தியம் செய்கிறோம். புதுவை மாநிலம் போதை கலாசாரத்தில் சிக்கித் தவிக்கிறது.

ரெஸ்டோ பார்களால் கலாசாரம் சீரழிந்துள்ளது. எதையும் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. அதனால் இந்த மாநாட்டில் உறுதிமொழி ஏற்று 2026 தேர்தலில் ஜோஸ் சார்லசை முதலமைச்சராக்க பாடுபட வேண்டும்” என்றார்.

பா.ஜ.க ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ-வான அங்காளன் என்ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க  அரசை கடுமையாக விமர்சித்திருப்பது புதுச்சேரி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *