• September 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 25) மாலை தொடங்கியது.

இதில், முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திமுக அமைச்சர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

திரைத்துறையிலிருந்து, வெற்றிமாறன், மிஷ்கின், மாரி செல்வராஜ், தியாகராஜா குமாரராஜா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்களால் பயன்பெற்ற மாணவ மாணவிகள் மேடையில் நெகிழ்ச்சியாகப் பேசினர்.

அதைத்தொடர்ந்து, 2025-26 கல்வியாண்டுக்கான புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களை ஸ்டாலினும், ரேவந்த் ரெட்டியும் சேர்ந்து தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தில், 2,65,318 பேர் பயன்பெறுவார்கள் என்றும் அதில் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ரேவந்த் ரெட்டி, “தமிழர்களும், தெலுங்கர்களும் பல நூற்றாண்டுகளாக கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.

1991 தாராளமயமாக்கலுக்குப் பிறகு தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மற்றும் தெலங்கானாவின் ஐ.டி வளர்ச்சி இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்தது.

சமூக நீதியில் தமிழ்நாடும், தெலங்கானாவும் ஒரேமாதிரியான கொள்கைகளைக் கொண்டிருக்கிறது.

கருணாநிதி எங்களுக்கு இன்ஸ்பிரேஷன். உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. ஓ.பி.சி-க்கு 42 சதவிகிதம் எஸ்.சி, எஸ்.டி-க்கு 27 சதவிகிதம் என மொத்தமாக 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை நாங்கள் செயல்படுத்த விரும்புகிறோம். தமிழ்நாடுதான் இன்ஸ்பிரேஷன்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

அனைத்து இந்தியர்களும் தமிழ்நாட்டின் கல்வியைப் பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகியிருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவை முதலில் வழங்கியது தமிழ்நாடு.

தமிழ்நாட்டைப் பார்த்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவிலும் இது கொண்டுவரப்பட்டது.

தெலங்கானாவில் இன்ஜினியர்களின் திறமைகளை மேம்படுத்த `யங் இந்திய ஸ்கில்ஸ் யுனிவர்சிட்டி’ தொடங்கியிருக்கிறோம்.

கடந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கம்கூட நாம் வெல்லவில்லை. நம்முடைய மக்கள்தொகை 140 கோடி.

ஆனால், நான்கு கோடி மக்கள்தொகை கொண்ட தென் கொரியா 32 தங்கப் பதக்கங்களை வென்றது. தென் கொரியாவில் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டிக்கு சென்றிருந்தேன்.

அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒலிம்பிக்கில் 16 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்கள். ஒரு பெண் 3 தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

ஆனால், நம்மிடம் ஒன்றுகூட இல்லை. அதனால், `யங் இந்தியா ஸ்போர்ட்ஸ் யுனிவெர்சிட்டி’ ஆரம்பித்தோம்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

எங்களுடைய பல்கலைக்கழகத்தில் பயிற்சியளிக்க சில மாணவர்களை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்திருக்கிறது. நாங்கள் அட்மிஷன் தருவோம்.

2028 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல தமிழ்நாடும், தெலங்கானாவும் பொறுப்பேற்றிருக்கிறது.

மோடி, அமித் ஷா அதை செய்யமாட்டார்கள். அதை நாங்கள் செய்து ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வோம்.

தமிழ்நாடு, தெலங்கானா மாடலைக் கண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

சமத்துவம், சமூக நீதி, வளர்ச்சி ஆகியவற்றுக்கு கல்விதான் சிறந்த ஒரே வழி என்று எங்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *