• September 25, 2025
  • NewsEditor
  • 0

கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் கோவை கார்த்திக்கின் கட்சி பொறுப்பை தி.மு.க தலைமை அதிரடியாக பறித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் பின்னணி குறித்து கோவை மாவட்ட திமுகவினரிடம் விசாரித்தோம்.

“கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் திமுக மிகவும் பின் தங்கியே இருக்கிறது. இதனால்தான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஐந்து மாவட்டமாக கழகமாக இருந்த திமுக அமைப்பை மூன்றாக மாற்றி, முக்கியமான நபர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்படிதான், கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளராக கோவை நா. கார்த்திக் நியமிக்கப்பட்டார்.

திமுக தலைமைக்கழக அறிவிப்பு

ஆனாலும், கோவையில் திமுக-வால் வெற்றிப் பெறமுடியவில்லை. இதையடுத்து, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார்.

கார்த்திக்

தொடர்ந்து நடந்த உள்ளாட்சி அமைப்புகளில் திமுக நல்ல வெற்றியை பெற்றது. அப்போதிருந்தே கோவை கார்த்திக்கும் செந்தில் பாலாஜிக்கும் சுமுகமான உறவு இல்லை. மாறாக இருவருமே எதிர் அரசியலில் ஈடுபட தொடங்கினர். இந்தநிலையில்தான், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார் செந்தில் பாலாஜி.

அவர் சிறையில் இருந்தபோதும் கோவை மாவட்ட நிர்வாகிகள் கட்சி நிகழ்ச்சியின்போது செந்தில் பாலாஜியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரைதான் ஒட்டினர். ஆனால், கோவை கார்த்திக் தனது மாவட்ட கழக நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜியின் போட்டோவோ பெயரையோ பயன்படுத்துவே இல்லை. தொடர்ந்து அமைச்சர் பதவியை இழந்த செந்தில் பாலாஜி, கோவைக்கு இன்னும் பொறுப்பாளராகவே இருக்கிறார். ஆனால், அவருடன் கார்த்திக் ஒருவித மோதல் போக்கையே கடைபிடித்து வந்தார். இந்தநிலையில், ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கையிலும் கார்த்திக் சரியாக செயல்படவில்லை.

செந்தில் பாலாஜியுடன் துரை.செந்தமிழ்ச்செல்வன்

சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை எல்லா நிர்வாகிகளையும் அரவணைத்து செல்லாமல், எதிர் அரசியலையே செய்து வந்தார். அதேபோல, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அவர் செய்யும் ஒரு கட்டட பணியிலேயே முழு கவனத்தை செலுத்தினார். எனவேதான், அவரை வைத்துக் கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க முடியாது என்று மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜி மேலிடத்துக்கு புகாராக அனுப்பியிருந்தார். அதன்படியே, அவரின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, பீளமேடு பகுதி – 1 செயலாளராக இருக்கும் துரை.செந்தமிழ்ச்செல்வனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வயதுகுறைவான செந்தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர்.” என்றனர் விரிவாக.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *