
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பவளக்காரத் தெருவைச் சேர்ந்தவர் வேணு (வயது 33). இவரின் மனைவி ஜனனீ (28). இவர்களது மூன்றரை வயது குழந்தை யோகேஷ், நேற்று மதியம் 12.20 மணியளவில் மர்ம நபர்களால் காரில் கடத்திச்செல்லப்பட்டான். தலையில் ஹெல்மட் அணிந்து, கையில் கிளவுஸ் மாட்டிக்கொண்டு வீட்டுக்குள் மிளகாய் பொடியுடன் புகுந்த ஒருவன், தந்தை வேணுவின் முகத்தில் மிளகாய் பொடியை அடித்துவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு காரில் ஏறினான்.
மகனை மீட்பதற்காக காரின் பின்பக்க கதவை எட்டிப்பிடித்த வேணு தரதரவென சாலையில் இழுத்துசெல்லப்பட்டு கீழே விழுந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பதைபதைக்க வைத்தன. இது குறித்து தகவலறிந்ததும், வேலூர் மாவட்ட எஸ்.பி மயில்வாகனன் காவல்துறையினரை முடுக்கிவிட்டு சுங்கச்சாவடிகள் மற்றும் மாநில எல்லையோர சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார்.
மதியம் 2.30 மணியளவில், திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அருகேயுள்ள தேவிகாபுரம் பகுதியில் குழந்தை யோகேஷை கடத்தல் நபர்கள் இறக்கிவிட்டு சென்றதாக தெரியவந்ததையடுத்து, போலீஸார் அங்கு விரைந்து சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு குழந்தையின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் குழந்தையை எஸ்.பி மயில்வாகனன் ஒப்படைத்தார்.

தொடர்ந்து, குழந்தையை கடத்திய நபர்களை பிடிக்கவும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில், குடியாத்தம் பவளக்காரத் தெருவில் வேணுவின் வீட்டருகே வசிக்கும் இளைஞர்கள் இருவரே கடத்தலில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, கடத்தலில் தொடர்புடைய பாலாஜியை நேற்று இரவு கைது செய்த போலீஸார், மற்றொருவருரான விக்கி என்ற விக்ரமனை இன்று பிடித்து கைது செய்திருக்கின்றனர். இருவரும் பணம் பறிக்கும் திட்டத்துடன் குழந்தையை கடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.