• September 25, 2025
  • NewsEditor
  • 0

பாஜக தலைமையிலான மத்திய அரசால் 2019-ல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து (அரசியலமைப்பு பிரிவு 370) நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன.

இதில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாமல் லெப்டினன்ட் ஆளுநர் பார்வையில் நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்கும் யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டன.

இந்த நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி கோடைகால தலைநகர் லே நகரில் இளைஞர்கள் குழு நடத்திய போராட்டம் நேற்று (செப்டம்பர் 24) வன்முறையாக வெடித்தது.

வன்முறையாக வெடித்த லடாக் போராட்டம்

இந்த வன்முறையில் அங்குள்ள பா.ஜ.க அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதில், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

அதையடுத்து, லே நகரில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றும் (செப்டம்பர் 25) நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

அதேவேளையில், மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 244-ன் கீழ் ஆறாவது அட்டவணையை லடாக்கிற்கு நீட்டிக்கக் கோரி 15 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் இந்த வன்முறை காரணமாகத் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

இதற்கிடையில், வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சோனம் வாங்சுக்தான் போராட்டத்தைத் தூண்டிவிடும் வகையில் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், லடாக் போராட்டம் முழு நாட்டுக்கான போராட்டமாக மாறக்கூடும் என்று எச்சரித்திருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கெஜ்ரிவால், “லடாக்கில் நடப்பது கவலையளிக்கிறது. உண்மையான தேசபக்தர் ஒவ்வொருவரும் லடாக் மக்களுடன் நிற்க வேண்டும்.

அதிகார போதையில் மூழ்கிப்போன பா.ஜ.க மாநிலங்களை யூனியன் பிரதேசமாக மாற்றி, அரசியலமைப்பால் வழங்கப்பட்ட உரிமைகளைப் பறிக்கிறது.

தங்களுக்கு வாக்குரிமையையும், தங்களுக்கான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும்தான் லடாக் மக்கள் கேட்கிறார்கள். ஆனால், பா.ஜ.க அவர்களின் குரலை அடக்குகிறது.

பாஜக
பாஜக

பலமுறை வாக்குறுதி அளிக்கப்பட்டும், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை.

ஜனநாயகம் என்பது மக்களின் குரல், அரசு அந்தக் குரலையே அடக்கத் தொடங்கும் போது, ​​இன்னும் சத்தமாகக் குரலெழுப்புவது மக்களின் கடமையாகிறது.

நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற விரும்பினால், இந்த சர்வாதிகாரத்திற்கு எதிராக இனியும் நாம் அமைதியாக இருக்க முடியாது.

லடாக்கில் இன்று நடக்கும் போராட்டம் நாளை முழு நாட்டிற்கும் நடக்கும் போராட்டமாக மாறக்கூடும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *