• September 25, 2025
  • NewsEditor
  • 0

மாணவிகள் புகார்

டெல்லி விகார் குஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்வி நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவர் சுவாமி பார்த்தசாரதி.

சுவாமி பார்த்தசாரதி அக்கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவிகளை இரவு நேரத்தில் தனது அறைக்கு அழைப்பது, அவர்களை தொடக்கூடாத இடத்தில் தொடுவது, அடிக்கடி ஆபாச மெசேஜ் அனுப்புவது என்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக மாணவிகள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.

சாமியார் பார்த்தசாரதி தலைமறைவு

இது குறித்து கல்வி நிறுவனத்தில் உள்ள மற்ற உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தால் அவர்கள் சாமியார் பேச்சைக் கேட்டு நடக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இதனால் சாமியார் பார்த்தசாரதிக்கு எதிராக 17 மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து போலீஸில் புகார் செய்துள்ளனர். இப்புகாரைத் தொடர்ந்து சுவாமி பார்த்தசாரதி தலைமறைவாகிவிட்டார்.

சாமியார் பார்த்தசாரதி தலைமறைவு

போலீஸார் விசாரணை

போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ”சாமியார் இரவு நேரத்தில் மாணவிகளிடம் தனது அறைக்கு வரும்படி அழைப்பு விடுப்பார் என்றும், தன்னுடன் வெளிநாட்டிற்கு வரும்படி கட்டாயப்படுத்துவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு மாணவிகளின் விடுதியில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி மாணவிகளை ரகசியமாகக் கண்காணித்து வந்ததாகவும், ஒரு மாணவியிடம் அவரது விருப்பத்திற்கு மாறாகப் பெயரை மாற்றும்படி கட்டாயப்படுத்தியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்த்தசாரதியைக் கைது செய்ய தனிப்படைகள் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடைசியாக அவர் ஆக்ராவில் தென்பட்டார்.

ஆனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அடிக்கடி அவர் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டிருப்பதாகவும், அவர் மொபைல் போன் பயன்படுத்துவதில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவி வாக்குமூலம்

ஒரு மாணவி கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ”முதல் முறையாக சாமியார் பார்த்தசாரதியைப் பார்க்கச் சென்றபோது என்னை ஒரு மாதிரி பார்த்தார். நான் உடம்பில் சில இடங்களில் காயம் அடைந்ததால் அது தொடர்பான மருத்துவ அறிக்கையை அவருக்கு அனுப்பினேன்.

அதற்கு நள்ளிரவு நேரத்தில் எனக்குப் பதிலளித்தார். அதில் பேபி ஐ லவ் யு என்றும், உன்னை பெரிதும் விரும்புகிறேன் என்றும், நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதோடு எனது முடி குறித்தும் என்னைப் பாராட்டியிருந்தார்.

சாமியார் பார்த்தசாரதி தலைமறைவு
சாமியார் பார்த்தசாரதி

அவரது மெசேஜ்களுக்கு பதிலளிக்கும்படி டேக் செய்திருந்தார். இது குறித்து கல்வி நிறுவனத்தின் டீனிடம் புகார் செய்தபோது, சாமியார் பார்த்த சாரதி மெசேஜ்களுக்கு பதிலளிக்கும்படி பெண் அதிகாரி என்னிடம் கேட்டுக்கொண்டார்.

எனக்கு மட்டுமல்லாமல் மற்ற பெண்களுக்கும் இதே போன்று சாமியார் மெசேஜ் அனுப்பியிருந்தார் என்பது பின்னர் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் கல்வி நிறுவனத்தின் கல்வி உதவித்தொகையில் படிக்கும் ஏழை மாணவிகள் ஆவர்.

மாணவிகளுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியபோது, எனது அறைக்கு வாருங்கள் என்றும், அப்படி வந்தால் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதாகவும், முழு செலவையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்த சாமியார்
பாலியல் தொல்லை கொடுத்த சாமியார்

விசாரணையில் அதிர்ச்சி

சாமியாரின் கோரிக்கைக்கு இணங்காத மாணவிகளை கல்வி நிறுவனத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்துவிடுவதாகவும், சான்றிதழ்களைக் கொடுக்கமாட்டேன் என்றும் மிரட்டல் விடுத்தது தொடர்பாக கல்வி நிறுவனத்தின் டீன் ஸ்வேதா உட்பட மேலும் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாமியார் ஏழைப் பெண்களை மட்டும் குறிவைத்து அவர்களிடம் தனது வேலையைக் காட்டியிருக்கிறார். அவர்களை மிரட்டியும், தேர்வில் தோல்வியடையச் செய்துவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

28 புத்தகங்களை எழுதியிருக்கும் பார்த்தசாரதி மீது பாலியல் புகார் சுமத்தப்படுவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. இதற்கு முன்பு 2009ஆம் ஆண்டும், 2016ஆம் ஆண்டும் மாணவிகளை மானபங்கம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஒடிசாவைச் சேர்ந்த பார்த்தசாரதி கடந்த 12 ஆண்டுகளாக டெல்லியில் இருந்து வருகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *