• September 25, 2025
  • NewsEditor
  • 0

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டில் அமைந்துள்ள செம்புரான் குளத்தில் மண் எடுக்கப்பட்டு தனியாரிடம் விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து பாக்கியம் நகரைச் சேர்ந்த நீர் நிலைகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ராஜபிரபு(30) என்பவருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து ராஜபிரபு தனது நண்பர் பாண்டியுடன் செம்புரான் குளத்திற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு, நகராட்சி பணிக்கு என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட, லாரியில் மண் ஏற்றப்பட்டிருந்தது. அந்த மண் தனியாருக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக, அங்கிருந்தவர்களிடம் ராஜபிரபு கேட்டுள்ளார்.

மண்

உடனே, லாரி டிரைவர், ராஜபிரபு, பாண்டி, இருவரையும் மோதி கொலை செய்யும் நோக்கில், லாரியை வேகமாக ஓட்டி வர இருவரும் நுாலிழையில் உயிர் தப்பினர். இது குறித்து ராஜபிரபு பட்டுக்கோட்டை நகர போலீஸில் மண் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீதும், லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி அளித்த புகாரின் பேரில் விசாரித்து வருகின்றனர். இது குறித்து ராஜபிரபு கூறுகையில், “நகராட்சிக்கு சொந்தமான செம்புரான் குளத்தினை துார்வாரும் பணியை நகராட்சி நிர்வாகம் தனியாருக்கு கொடுத்தது. அவர்கள் துார்வாரும் மண்ணை, கரைகளை பலப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டது.

இதை ஒப்பந்தம் எடுத்த தனியார் ஒப்பந்தக்காரர் வெளி சந்தையில் ஒரு லோடு ரூ.16,000 முதல் 20,000 வரை விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கேட்க சென்ற என்னையும், எனது நண்பரையும் கொலை செய்ய முயன்றதால் அதிர்ச்சியடைந்தோம். நகராட்சி மற்றும் வருவாய்துறை அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு எதுவுமே தெரியாது என சொல்லி விட்டனர்.” என்றார்.

ராஜபிரபு

நீர் நிலைகளை மீட்டு வரும் அரிய பணிகளை செய்து வருபவர் நிமல் ராகவன். முதல்வர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு நிமல் ராகவனை நேரில் அழைத்து, இளம் வயதிலேயே பொதுச் சிந்தனையுடன் ஏரிகளைச் சீரமைத்து வருவதற்காக பாராட்டினார். மேலும் எடுத்துக்காட்டெனச் செயல்பட்டு இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியாக இருப்பதாகவும் வாழ்த்தினார். இந்த நிலையில் நிமல் ராகவன் ராஜபிரவுக்கு நடந்த சம்பவம் குறித்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி தனது முக நூல் பக்கதில் பதிவிட்டுள்ளார்.

நகராட்சி பணிக்கு என ஸ்டிக்கர் ஒட்டிய லாரியில் மண் ஏற்றி விற்பனை செய்து தனியார் இடத்தில் இறக்கியுள்ளனர். இதை தட்டிகேட்ட ராஜபிரபுவை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளனர். ராஜபிரபு ஐந்து நீர் நிலைகளை மீட்டுள்ளார். இயற்கை வளங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருபவர். ஏரி, குளங்கள் சீரமைக்கும் போது மண்ணை விற்க கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். குளத்திற்குள் நின்ற ஜேசிபி இயந்திரம், லாரியை இரவோடு இரவாக அகற்றிவிட்டனர். மண் கொட்டப்பட்ட தனியார் இடத்தில் மண்ணை நிரவி விட்டு மறைக்க முயன்றுள்ளனர்.

திமுக கவுன்சிலர் கொடுத்த கடிதம்

செம்புரான் குளத்தின் மண் விற்பனை செய்யப்பட்டது குறித்து கேட்டால் நகராட்சி அதிகாரிகள் எதுவும் தெரியவில்லை என்கிறார்கள். நாங்கள் ஏரி, குளங்கள் சீரமைக்கும் போது மட்டும் எவ்வளவு கட்டுப்பாடுகள். அடிக்கடி வந்து பார்த்து விட்டும் செல்வார்கள். ஆனால், இப்போது மண் எடுப்பதே தெரியாது என்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம், திருட்டுத்தனம். இதை எல்லோரும் வேடிக்கை பார்க்கின்றனர். நாளைக்கு நாங்கள் இல்லாமல் போகலாம். முதல்வர் இதில் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு ராஜபிரபு மாதிரியான நபர்களுக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்த நிலையில், 1வது வார்டு திமுக கவுன்சிலர் சாந்தி குணசேகரன், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், செம்புரான் குளத்தில் கடந்த இரண்டு வருடங்களாக மண் அள்ளப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தன. கவுன்சிலருக்கு தெரியாமல் இது நடக்குமா என பேசுகின்றனர். எங்களுக்கும், மணல் திருட்டுக்கும் எவ்வித தொடர்பும், சம்பந்தமும் இல்லை. இது குறித்து தகுந்த விசாரணை செய்து பொதுமக்களுக்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து தகவல் பெற்று விளக்கம் அளிக்க கவுன்சிலர் என்ற முறையில் கடமை பட்டுள்ளோம் என்றுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *