• September 25, 2025
  • NewsEditor
  • 0

தொடரும் டிஜிட்டல் கைது மோசடி

சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு, மும்பை கிரைம் பிராஞ்ச் என்று பல பொய்களைச் சொல்லி அப்பாவி பொதுமக்களை டிஜிட்டல் முறையில் போலியாகக் கைது செய்து அவர்களிடம் இருக்கும் மொத்தப் பணத்தையும் சைபர் கிரிமினல்கள் அபகரித்து வருகின்றனர்.

இவ்விவகாரத்தில் மத்திய அரசு எவ்வளவுதான் விழிப்புணர்வுப் பிரசாரம் செய்தாலும் மக்கள் ஏமாந்து கொண்டுதான் உள்ளனர். டெல்லியைச் சேர்ந்த ஒரு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி இந்த மோசடியில் ரூ.23 கோடியை இழந்துள்ளார்.

சைபர் கிரிமினல்கள்

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் மோசடி

டெல்லியைச் சேர்ந்த நரேஷ் மல்ஹோத்ரா (78) என்பவர் பிரபல அரசு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த மாதம் ஒன்றாம் தேதி மர்ம போன் கால் வந்தது.

போனில் பேசிய நபர், தான் மொபைல் போன் கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஆதார் கார்டைப் பயன்படுத்தி மும்பையில் ஒரு போன் இணைப்பு பெறப்பட்டு அது தீவிரவாதிகளின் நிதி பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.

டிஜிட்டல் கைது மோசடி

அதோடு இது குறித்து மும்பை போலீஸாரிடம் பேசும்படியும் அந்த நபர் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து நரேஷ் மல்ஹோத்ரா கூறுகையில்,

“முதல் போன் அழைப்பு வந்த பிறகு பல்வேறு எண்களில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. மும்பை போலீஸ், அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ அதிகாரிகள் என்று அவர்கள் சொன்னார்கள். அனைவரும் சட்டரீதியான எச்சரிக்கை செய்தனர்.

சைபர் கிரிமினல்கள்
டிஜிட்டல் கைது மோசடி

போலீஸ்காரர் என்று என்னிடம் பேசியவர் எனது ஆதார் கார்டு தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டவும், தீவிரவாத செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

என்னை டிஜிட்டல் முறையில் கைது செய்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதோடு வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்று சொன்னார்கள். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வீடியோ கால் செய்தனர். அனைத்தையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

அதோடு பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்து, வெளிநாடுகளுக்குச் செல்ல விடாமல் தடுத்துவிடுவோம் என்றும் மிரட்டினர்.

எனது வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? என்று கேட்டார்கள்.

நான் ரூ.14 லட்சம் இருப்பதாகச் சொன்னேன். உடனே அந்தப் பணத்தை அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யச் சொன்னார்கள்.

விசாரணை முடிந்தவுடன் அவற்றை திரும்பக் கொடுத்துவிடுவதாகத் தெரிவித்தனர். ஒவ்வொரு முறை பணத்தை அனுப்பியதும், அதற்கு போலி ரிசர்வ் வங்கி சான்றிதழை அனுப்பினர்.

அதோடு உங்களை ரிசர்வ் வங்கி அதிகாரி தொடர்பு கொள்வார் என்றும் தெரிவித்தனர். மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இதர வகையில் எவ்வளவு முதலீடு இருக்கிறது என்று கேட்டார்கள்.

அந்த சொத்துகள் குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் விசாரணை நடத்தப்படும் என்று சொன்னார்கள்.

முதலில் எனது சொத்துகளில் 25 சதவீதத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.

அதன் பிறகு ஒட்டுமொத்த சொத்துகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.

அதற்கு சம்மதிக்காவிட்டால் எனது குடும்ப உறுப்பினர்களைத் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்வோம் என்று கூறினர்.

நானும் எனது மியூச்சுவல் ஃபண்ட் உட்பட அனைத்துப் பணத்தையும் எடுத்து அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்ஃபர் செய்தேன்.

அதற்கு அவர்கள் ரிசர்வ் வங்கி முத்திரை பதித்த ரசீது கொடுத்தார்கள்.

சைபர் கிரிமினல்கள்
டிஜிட்டல் மோசடி

செப்டம்பர் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் பதிவாளருக்கு ரூ.5 கோடியை டெபாசிட் செய்யும்படி கூறினார்கள். ஆனால் தனியார் வங்கிக் கணக்கில் செலுத்தும்படி சொன்னார்கள்.

நான் சுப்ரீம் கோர்ட் வங்கிக்கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்வேன் என்று சொன்னேன். அதோடு போலீஸ் நிலையத்தில் சென்று புகார் செய்வேன் என்று சொன்னேன். உடனே போனைத் துண்டித்துவிட்டார்கள்.

எனது வாழ்நாள் முழுக்க சேமித்து வைத்த ரூ.23 கோடியை இழந்துவிட்டேன். தவறான நபர்களை நம்பியதால் எனது பணம் போய்விட்டது. எனது கதை அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை” என்று வேதனையோடு தெரிவித்தார்.

இது குறித்து மல்ஹோத்ரா போலீஸில் புகார் செய்துள்ளார். சைபர் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து ரூ.2.67 கோடியை மட்டும் முடக்கியுள்ளனர்.

விரைவில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிப்போம் என்று டெல்லி போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

47 நாட்கள் மல்ஹோத்ராவை டிஜிட்டல் முறையில் கைது செய்து இந்த மோசடியைச் செய்துள்ளனர். மல்ஹோத்ரா அனுப்பிய பணத்தை நாடு முழுவதும் உள்ள 4000 வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *