
மலர்க் கட்சியின் டெல்லி மேலிடம், சிட்டிங் தலைமைக்கு சில உத்தரவுகளைப் போட்டிருக்கிறதாம். அதன்படிதான், சார்பு அணிகளுக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனராம். அடுத்தபடியாக, மண்டல அளவில் அணிகளுக்கான பொறுப்பாளர்களை நியமிக்கப்போகிறார்களாம். அது தொடர்பாக, மாநில அளவில் நிர்வாகிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூரில் ஏற்பாடாகிறதாம். இதையெல்லாம், டெல்லிக்கு அப்டேட் கொடுத்திருக்கிறாராம் சிட்டிங் தலைவர். அடுத்தடுத்த நிர்வாகிகள் நியமனம் நடப்பதால், சிட்டிங் தலைமையிடம் சிபாரிசு கேட்டு கூட்டமும் அலை மோதிகிறதாம். ‘இப்போதுதான் தலைவர் வீடு மாதிரி இருக்கு ‘ என்று ஆனந்தம் அடைகிறார்களாம் சிட்டிங் தலைவரின் ஆதரவாளர்கள்!
இலைக் கட்சியில், பெல் மாஜியின் நிழலாக வலம்வந்த நிலவுப் பிரமுகர், அந்தக் கட்சியிலிருந்து விலகி, ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. கட்சியிலிருந்து விலகிய பிறகு, அவர் அமைதியோ அமைதியாக இருந்த நிலையில், அண்மையில் தனது பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாடியிருக்கிறார். தன் ஏரியா முழுக்க போஸ்டர்கள் அடித்து, தனது ஆதரவாளர்களுக்குக் கறி விருந்தும் கொடுத்துள்ளார். ஆறு மாதமாக அமைதியாக இருந்தவர், திடீரென களத்தில் இறங்கியதற்குப் பின்னால், பெரும் பிளான் இருப்பதாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதாவது, ‘வரும் தேர்தலில் சூரியக் கட்சியில் இணைந்து, மான்செஸ்டர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் இறங்கி, மாஜிக்கு டஃப் கொடுப்பதுதான் அவரது பிளான்’ என்கிறார்கள். ஆனால், இதுவரையில் சூரியக் கட்சியிலிருந்து நேசக்கரம் ஏதும் அவருக்கு நீட்டப்படவில்லையாம். அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும்தான், தன் பிறந்தநாளைத் தடபுடலாகக் கொண்டாடியிருக்கிறாராம் நிலவுப் பிரமுகர்!
பூட்டு மாவட்டத்திலுள்ள அறுபடை வீடு அமைந்திருக்கும் தொகுதியின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், சூரியக் கட்சியின் சார்பாக சமீபத்தில் நடந்திருக்கிறது. மலை நகரத்தின் பெண் கவுன்சிலர் ஒருவர், பொதுக்குழு உறுப்பினர் என்ற முறையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். அவரைக் கண்டதும் டென்ஷனான மலை நகரத்தின் சூரியக் கட்சிப் பிரமுகர், கடுமையான வார்த்தைகளால் அவரை வறுத்தெடுத்ததோடு, பெண் கவுன்சிலரையும் அவரது ரத்த உறவு ஒருவரையும் அடிக்கவும் பாய்ந்தாராம். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கட்சிக்காரர்கள், சண்டையை விலக்கிவிட்டு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்தக் களேபரங்களை எல்லாம் புகாராக எழுதி, மாவட்டச் செயலாளருக்கும் தலைமைக்கும் அனுப்பிவிட்டாராம் அந்தப் பெண் கவுன்சிலர். ‘மலை நகரத்தில், சூரியக் கட்சியின் நகரப் பிரமுகருக்கும், பெண் கவுன்சிலரின் குடும்பத்துக்கும் ஏதோ முன்பகை இருக்கிறது…’ என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். விரைவிலேயே இது குறித்த பஞ்சாயத்து, தலைமைக் கழகத்தில் நடக்கவிருப்பதால், அனலாகியிருக்கிறது மலை நகரம்!
அ.தி.மு.க-வில், பூத் கமிட்டியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகிறார், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, பூத் கமிட்டிகள் அமைப்பதற்காகவே மாவட்டம் தோறும் பொறுப்பாளர்களை நியமித்து, கண்காணித்தும் வந்தார். இந்த நிலையில், ‘பொறுப்பாளர்கள் ஒப்புதல் இல்லாமலேயே, தலைமைக் கழகத்திலுள்ள ஆட்களை வைத்து பூத் கமிட்டி அமைத்துவிட்டதாக’ தவறான புள்ளிவிவரங்களைச் சமர்ப்பித்திருந்தனர் சில மா.செ-க்கள். இதற்கிடையே, பூத் கமிட்டி உறுப்பினர்களுக்குப் பயிற்சி வழங்க, மாவட்டம் தோறும் மூன்று நிர்வாகிகளை நியமித்தார் எடப்பாடி. அவர்களும் வேலைகளைத் தொடங்கிய நிலையில், ‘பூத் கமிட்டியில் நடந்திருக்கும் தவறுகளை அந்த நிர்வாகிகள் கண்டுபிடித்து விடுவார்களோ…’ என்று பதறிப்போய்விட்டார்களாம் தவறான புள்ளிவிவரங்களை அளித்த மா.செ-க்கள். பூத் கமிட்டிப் பயிற்சி நிர்வாகிகள் எந்த மாவட்டங்களைச் சார்ந்தவர்களோ, அந்தந்த மாவட்ட நிர்வாகிகளைப் பிடித்து, ‘ரொம்ப கிளற வேண்டாம் எனச் சொல்லுங்கள்…’ என்று டீல் பேசிவிட்டார்களாம். அதன்படி, அமைக்கப்படாத பூத் கமிட்டிகளுக்கும், பயிற்சி வழங்கப்பட்டதாகக் கணக்குக் காட்ட தயாராகி வருகிறார்களாம் பயிற்சி நிர்வாகிகள்!
தென்கோடி மாவட்டத்தில் ஏற்கெனவே சில கல்குவாரிகள் செயல்படுகின்றன. மேலும், சுமார் ஆறு குவாரிகளுக்குப் புதிதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளனவாம். ‘ஏற்கெனவே செயல்படும் குவாரிகளையும், புதிய குவாரிகளையும் இயக்க வேண்டுமானால், தலா இரண்டு ஸ்வீட் பாக்ஸ்கள் தர வேண்டும்’ என்று மாவட்ட மாண்புமிகு ஒருவர் டிமாண்ட் வைத்துள்ளாராம். ‘குவாரியே இப்போதுதான் ஓடத் தொடங்கியிருக்கிறது. அதனால், மொத்தமாக ஸ்வீட் பாக்ஸ் தருவதில் சிரமம் உள்ளது. எனவே, மாதம் ஐந்து லட்டுகளாக தவணை முறையில் தருகிறோம்…’ எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் சில குவாரி உரிமையாளர்கள். ‘வரும் தேர்தலில், தலைமையிடமிருந்து பெரிதாக உதவி ஏதும் வராது. எனவே, ஸ்வீட் பாக்ஸ்களை மொத்தமாக நீங்கள் தந்தால்தான், குவாரியை ஓட்ட விடுவேன்…’ எனக் கறார் காட்டுகிறாராம் அந்த மாண்புமிகு. இந்த விவகாரம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, ‘மாண்புமிகுவின் அட்ராசிட்டிகள்…’ என ஒரு பெரிய பட்டியலைப் போட்டு, மேலிடத்திற்குப் புகாராகத் தட்டிவிட்டிருக்கிறார்களாம் மாண்புமிகுவுக்கு எதிரான உள்ளூர் உடன்பிறப்புகள்!