
மும்பையின் மேற்கு பகுதியை தென்பகுதியோடு இணைக்கும் விதமாக கடற்கரையொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் போக்குவரத்திற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இச்சாலையில் கடலில் சுரங்க சாலையும் கட்டப்பட்டுள்ளது. இந்தச் சுரங்க சாலையில் இன்று காலை கார் ஒன்று திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இதனால் சுரங்கம் முழுக்க புகைமண்டலமாக மாறியது.
தார்டுதேவ் நுழைவு வாயில் பகுதியில் ஏற்பட்ட இத்தீவிபத்து காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுரங்கத்தின் இரு மார்க்கத்திலும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன. சுரங்கத்தில் காரில் பற்றிய தீயை தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு அணைத்தனர். பிரீஜ் கேண்டி சுரங்க நுழைவு வாசல் வழியாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உள்ளே சென்று தீயை அணைத்தன. காரில் பற்றிய தீ அருகில் நின்ற மற்ற கார்களுக்குப் பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
இத்தீவிபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இத்தீவிபத்து காரணமாக கடற்கரை சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் எங்கேயும் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்ற வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக பரவி இருக்கிறது.
புகை முற்றிலும் வெளியேறிய பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.