
திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டத்தை சீரமைக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை தேவஸ்தானம் அமல்படுத்த உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
திருமலையில் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை (ஐசிசி), வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழ்வுகளை ஏஐ மூலம் பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் உடனுக்குடன் அறிய முடியும். இதற்காக 25-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோயிலில் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும்.