• September 25, 2025
  • NewsEditor
  • 0

திருமணமான இந்து பெண் வாரிசு இல்லாமல், அதேசமயம் உயில் எழுதி வைக்காமல் இறந்து போகும் பட்சத்தில் அவரது சொத்து கணவன் வீட்டாருக்குச் சொந்தம் என்பதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன.

இம்மனு மீதான விசாரணையின்போது கொரோனா காலத்தில் ஒரு தம்பதி இறந்துவிட்டதையும், அதில் இறந்த பெண்ணின் சொத்துக்கு அப்பெண்ணின் தாயாரும், அப்பெண்ணின் கணவனின் தாயாரும் உரிமை கோருவதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதே போன்று மற்றொரு தம்பதி குழந்தை இல்லாமல் இறந்து போனார்கள். அவர்களின் சொத்துக்கு இறந்து போன ஆணின் சகோதரி உரிமை கோரினார். இதில் ஆஜரான வழக்கறிஞர், இது பொதுநலன் சார்ந்த பிரச்னை என்பதால் இதில் சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதில் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டின் ஒரே பெண் நீதிபதியான நாகரத்னா, ”இந்து சமூகம் ‘கன்யாதான்’ என்ற கருத்தைக் கொண்டுள்ளது. அதன் கீழ் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளும்போது, ​​அவளுடைய கோத்திரம், அதாவது ஒரு குலம் மாறிவிடுகிறது என்று அதில் கூறுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறையில் சுப்ரீம் கோர்ட் தலையிட விரும்பவில்லை. ஒரு பெண் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்றுவிட்டால் அப்பெண்ணிற்கு கணவனும், அவரது வீடும்தான் பொறுப்பாகும்.

திருமணமான பெண்கள் தங்களது சகோதரனிடம் பராமரிப்புச் செலவு கேட்டு விண்ணப்பத்து கிடையாது. தென்னிந்தியத் திருமண சடங்குகளில் பெண் ஒரு கோத்திரத்தில் இருந்து மற்றொரு கோத்திரத்திற்கு மாறுவதாகக் கூறுகிறது” என்று நீதிபதி தெரிவித்தார்.

தற்போது திருமணமான விதவை பெண் வாரிசு இல்லாமல் அதேசமயம் உயில் எழுதாமல் இறந்தால் அவரின் சொத்துக்கள் கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும் வகையில் சட்டம் இருக்கிறது. இந்த சட்டப்பிரிவை எதிர்த்துத்தான் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்கள் மீதான மேல் விசாரணை வரும் நவம்பர் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *