
லே: லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் இருந்து லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக லடாக் மக்கள் தங்கள் பகுதிக்கு மாநில அந்தஸ்தும் நிலம், கலாச்சாரம் மற்றும் வளங்களை பாதுகாக்கும் வகையில் அரசியல் சாசன பாதுகாப்பும் கோரி வருகின்றனர்.
லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்தும் அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கடந்த 2 வாரங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவரது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லடாக்கில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு ‘லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்தது.