• September 25, 2025
  • NewsEditor
  • 0

KPY பாலா தொடர்ந்து சிலருக்கு உதவி செய்துவருவதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அவர் உதவி செய்வதற்குப் பின்னணியில் சில திட்டம் இருப்பதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

குறிப்பாக, அவர் வழங்கிய ஆம்புலன்ஸ்களின் காலாவதி தேதி, அவற்றின் எண், உதவி பெறுபவர்களின் தேர்வு, அவர்களைப் படம் பிடிக்கும் விதம், அவர்களின் உணர்வுகளை வீடியோவாகப் பதிவு செய்து பரப்புவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்படுகின்றன.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் KPY பாலா வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், ‘எனக்கு எந்த சர்வதேச தொடர்பும் இல்லை. நான் தினக்கூலி யாருக்கும் கைகூலி இல்லை’ எனத் தெரிவித்திருந்தார்.

KPY பாலா

அதைத் தொடர்ந்து KPY பாலாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் வெகுசிலர் மட்டுமே.

முட்கள் அடர்ந்து நிறைந்த காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பூக்கள் பூக்கிறது. அப்படி அரிதினும் அரிதாகப் பூத்த மலர்தான் தம்பி பாலாவும்.

தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல, தம்மை வருத்தி மற்றவர் வாழ வழி ஏற்படுத்தித் தரும் தம்பி பாலாவின் உயர்ந்த உள்ளமும், உதவுகின்ற செயல்களும் மிகுந்த பாராட்டுக்குரியது.

வறுமையில் வாடும் மக்களுக்கு தம்பி பாலா தம்மால் முடிந்த அளவு உதவிகளைச் செய்து வருகின்றார். நாம் அதனை வாழ்த்தி, வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும். முடிந்தால் அவரைப்போல தாமும் உதவிகள் செய்ய வேண்டும்.

மாறாக உதவி செய்பவர்கள் புகழ் பெறுகிறாரே என்று பொறாமை கொள்வதும், அவருக்குக் கிடைக்கும் நற்பெயரைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறுகளை அள்ளித்தெளிப்பதும் தரம் தாழ்ந்த இழிச்செயலாகும்.

தம்பி பாலா மீது சமூக ஊடகங்கள் வாயிலாக கடந்த 10 நாட்களாகச் சிலர் செய்யும் எதிர்மறையான அவதூறு தாக்குதல் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான்

ஒருவர் தன்னலமற்று தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தால் எத்தனை எத்தனை கேள்விகள்? உதவி செய்கின்றவருக்கு எங்கிருந்தோ பணம் வருகின்றது.

அவர் சர்வதேச கைக்கூலி என்கின்றனர். சரி, அப்படியே இருக்கட்டும். அதனால் உங்களுக்கு என்ன பிரச்னை? எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் நீங்கள்தான் சர்வதேச கைக்கூலி.

எங்கிருந்தோ பணம் வருகின்றது என்று கண்டுபிடித்தவர், அது எங்கிருந்து வருகின்றது என்று கண்டுபிடித்துச் சொல்ல முடியாதது ஏன்? உங்களுக்கெல்லாம் வராத பணம் அவருக்கு மட்டும் ஏன் வருகின்றது?

இந்த நாட்டில் உளவுத்துறை உள்ளது. பாதுகாப்பு முகமை உள்ளது. வருமானவரித்துறை உள்ளது. சிறப்புப் புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை உள்ளன. அது அவர்களுடைய வேலை, அவர்களுடைய கவலை. உங்களுக்கு என்ன கவலை?

எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, அவருக்கு எங்கிருந்து பணம் வருகின்றது? அவர் எப்படி மருத்துவமனை கட்டுகிறார்? என்றெல்லாம் நீங்கள் ஆராய்ச்சி செய்வது ஏன்?

இதையெல்லாம் கேட்பவர்கள் எப்படி இவ்வளவு கோடிக்கு சமாதி கட்டுனீங்க? எப்படி இவ்வளவு கோடி போட்டு திரைப்படம் எடுக்குறீங்க? அப்படியென்று யாரையும் கேட்பது இல்லையே ஏன்?

KPY பாலா
KPY பாலா

தம்பி பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன? அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது அரசும், அது சார்ந்த நிர்வாக அமைப்புகளும்தான். உங்களுக்கு என்ன வேலை அதில்?

ஏனென்றால், இப்போது தம்பி பாலாவைப் பற்றிப் பேசினால்தான் உங்களுக்கு வருமானம் வரும்? நீங்கள்தான் தம்பி பாலாவைப் பற்றிப் பேசி பிழைக்க வேண்டிய நிலையில் உள்ளீர்கள்.

மற்றவர் கண்ணீரைத் துடைத்து உதவ வரும் இளம்பிள்ளைகளை வருமுன்னே இப்படி கசக்கித் தூரப்போட்டீர்கள் என்றால், இனி வருங்காலத்தில் இதுபோல யார் உதவ முன்வருவார்கள்?

பாலா போன்ற உதவும் உள்ளங்களை நாம் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை; துண்டாடாமல் இருங்கள். போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமல் இருங்கள்.

இப்பொழுது தம்பி பாலாவைப் பற்றி அவதூறு பேசி, நீங்கள் சாதித்தது என்ன? பிறர் துயர் துடைக்கும் தம்பி பாலாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதே தவிர இதனால் நிகழ்ந்த நன்மை என்ன?

இவற்றையெல்லாம் பார்க்கும்போது இவ்வளவு அருவருப்பான சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோமா? என்ற நடுக்கம் வருகின்றது.

யாருக்கு என்ன உதவி செய்தாலும் அதில் குறை சொல்பவர்கள், அவர்கள் இதுவரை மற்றவர்களுக்குச் செய்த உதவிகள் என்ன? என்ற கேள்விக்குப் பதில் தருவார்களா?

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான்

அன்புத்தம்பி பாலாவுக்கு நான் சொல்வது, எது குறித்தும் யோசிக்காமல், கவலைப்படாமல் இல்லாதவர்களுக்கு உதவும் தொண்டினைத் தொடர்ந்து செய்துகொண்டே இரு.

தூரத்தில் இருந்தாலும் என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான அண்ணன்கள் உன்னை நேசித்துத் துணைநிற்கின்றோம். எத்தனையோ தாய்மார்கள் உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அன்று உன்னிடம் சொன்னதையே மீண்டும் உனக்குச் சொல்கிறேன். ‘அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்!’ என்ற நம் அறிவு மூதாட்டி ஔவையின் வார்த்தையை உச்சரித்துக்கொண்டே முன்னேறிச் சென்றுகொண்டே இரு!

மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவுகிற கைகளைத்தான் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள்! அதனால்தான் உன்னை விரும்புகிறார்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *