
MS பாஸ்கர்
MS பாஸ்கர், தமிழ் திரையுலகின் அற்புதமான கலைஞர் எனக் கூறலாம். நாடகக் கலைஞரான இவர், 1987-ம் ஆண்டு வெளியான திருமதி ஒரு வெகுமதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், 2004-ம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா படம் இவருக்கான முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர், சமீபகாலமாகக் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
`சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது’
அதில் முக்கியமானது ஹரிஷ் கல்யாணுடன் இவர் நடித்த பார்க்கிங் திரைப்படம். இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ் பாஸ்கருக்கு 2023-ம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் சூரி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கஷ்டங்களும் தியாகங்களும் நிறைந்த பல ஆண்டுகளின் உழைப்பின் பலன் இன்று தேசிய விருதாக மலர்ந்துள்ளது. இவரின் பயணம் எனக்கு ஒரு பெரிய பாடமாகவும் ஊக்கமாகவும் உள்ளது.
இதே துறையில் பணிபுரிந்து, இத்தகைய சிறந்த கலைஞரை கொண்டாடுவதில் பெருமை கொள்கிறேன்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.