
லடாக்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் 2019ஆம் ஆண்டு விலக்கிக்கொள்ளப்பட்டபோது லடாக் பகுதி தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரும் தனியாக ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
பனிப்பொழிவு நிறைந்த லடாக் பகுதி சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருக்கிறது. வெறும் 3 லட்சம் மக்களைக் கொண்ட லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியல் சாசனத்தின் 6வது பிரிவின் கீழ் தங்களது பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி லடாக் பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் லே பகுதியில் 35 நாள் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு இளைஞர்கள் மயங்கி விழுந்ததால் அவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் லடாக் பகுதி முழுவதும் வன்முறை ஏற்பட்டது.
வன்முறை
உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் நின்ற வாலிபர்கள் ஊர்வலமாகச் சென்று அங்கிருந்த பா.ஜ.க அலுவலகத்தைத் தீவைத்து எரித்தனர்.
2 ஆயிரம் பேர் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அவர்கள் வரும் வழியில் நின்ற வாகனங்களை அடித்துச் சேதப்படுத்தினர்.
அதோடு அவற்றைத் தீவைத்தும் எரித்தனர். பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் மீது கல்வீசித் தாக்கினர்.

இதனால் போராட்டக்காரர்களைக் கலைந்து போகச் செய்ய கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் போலீஸார் பயன்படுத்தினர். ஆனால் கூட்டம் கலைந்து செல்லவில்லை.
போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் 50 போலீஸார் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் அரசு அலுவலகத்திற்கும் தீவைத்தனர்.
இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். இதனால் லே பகுதி போர்க்களமானது. இளைஞர்கள் அமைதி காக்க வேண்டும் என்று சோனம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வன்முறைக்கு வித்திட்ட Gen Z
அதோடு இந்த வன்முறையைத் தொடர்ந்து சோனம் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று 14 நாட்களில் முடித்துக்கொண்டார்.
உண்ணாவிரதத்தின்போது சோனம், Gen Z மற்றும் Arab Spring-style போராட்டம் குறித்துப் பேசியிருந்தார். இந்தப் பேச்சுத்தான் வன்முறைக்கு வித்திட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “பல தலைவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்திய போதிலும், சோனம் அதைத் தொடர்ந்தார். Gen Z மற்றும் Arab Spring-style போராட்டங்கள் பற்றிய ஆத்திரமூட்டும் வகையில் பேசி மக்களைத் தவறாக வழிநடத்தினார்.
அவரது ஆத்திரமூட்டும் பேச்சுகளால் ஒரு கும்பல் உண்ணாவிரதப் போராட்ட இடத்தை விட்டு வெளியேறி ஒரு அரசியல் கட்சி அலுவலகம் மற்றும் லேயின் அரசாங்க அலுவலகத்தைத் தாக்கியது” என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

தனி மாநிலக் கோரிக்கை மற்றும் சிறப்பு அந்தஸ்து குறித்து விவாதிக்க மத்திய அரசு வரும் அக்டோபர் 6ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இப்பேச்சுவார்த்தையை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று கார்கில் ஜனநாயகக் கூட்டணி கோரிக்கை விடுத்திருந்தது.
அருகில் உள்ள நேபாளம் மற்றும் பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் புரட்சி ஏற்பட்ட நிலையில் லே பகுதியில் ஏற்பட்டுள்ள இப்போராட்டம் மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே வடகிழக்குப் பகுதியில் உள்ள மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது.