• September 25, 2025
  • NewsEditor
  • 0

கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்படும்.

தற்போது 2021, 2022, 2023-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதை அறிவித்திருக்கிறார்கள்.

இதில் சினிமா பிரிவில், 2022-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பாடலாசிரியர் விவேகாவுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விவேகா

25 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வரும் விவேகாவுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்கள் பட்டியலில் முக்கிய இடமுண்டு.

விருதுக்கு வாழ்த்துச் சொல்ல அழைக்கும் அழைப்புகளில் பிஸியாக இருந்தவரைப் பிடித்து வாழ்த்துகள் சொல்லி நாமும் பேசினோம்.

பாடலாசிரியர் விவேகா பேசுகையில், “இந்தத் தருணம் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கு. தொடர்ச்சியாக 25 வருஷமா நான் பாடலாசிரியராக இயங்கி வர்றேன்.

அதுக்கு கிடைத்த அங்கீகாரமாகத்தான் இந்தக் கலைமாமணி விருதைப் பார்க்கிறேன். ஒரு பாடல் எழுதி, அது வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கிற தருணமே எனக்கு விருது கிடைச்ச மாதிரிதான்.

இது மக்கள் எனக்குக் கொடுக்கிற விருது. இப்போ, தொடர்ச்சியாக நம்முடைய வேலைகளைக் கவனிச்சு வர்ற அரசு இந்த உயரிய மற்றும் பெருமைக்குரிய விருதான கலைமாமணி விருது கொடுத்திருக்காங்க.

Lyricist Viveka
Lyricist Viveka

இது நல்லபடியாக இயங்கி வர்றேன்னு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுக்குது.

இன்னும் நான் சாதனைகள் செய்யணும்னு ஊக்கத்தையும் இது கொடுக்குது.

இத்தனை வருஷமா, 1000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி முன்னணி பாடலாசிரியராக இவர் இருக்கிறார்னு அரசு அங்கீகரிக்கிறதாகத்தான் இதை எடுத்துக்கிறேன்.

என்னுடைய வாழ்வில் விருது அறிவிக்கப்பட்ட இந்த நாளை நான் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய நாளாகப் பார்க்கிறேன்.

உண்மையைச் சொல்லணும்னா, நான் விருதுகளை எப்போதும் எதிர்பார்த்தது கிடையாது. அத்தனை விருதுகளுமே அதுவாகவே கிடைச்சதுதான். ஆளுநர் விருது தொடங்கி பல முக்கியமான விருதுகளையும் நான் வாங்கியிருக்கேன்.

முனைவர் டாக்டர் பட்டமும் நான் பெற்றிருக்கேன். இப்படியான விருதுகள் எனக்குக் கிடைச்சிருப்பது ரொம்ப சந்தோஷம். நான் விருதுகளை எப்போதும் எதிர்பார்த்தது கிடையாது.

இனிமேலும், எனக்கு விருது கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்.

Lyricist Viveka
Lyricist Viveka

ஆனா, இதுவரைக்கும் இத்தனை அங்கீகாரங்கள் என்னைத் தேடி வந்திருப்பது ரொம்பவே மகிழ்ச்சி.” என்றவர், காயங்கள் இல்லாமல் சாதனை கிடையவே கிடையாதுங்க!

சொற்பொழிவாளர் சுகி சிவம் அவர்கள் சமீபத்துல ‘ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அவமானங்கள் இருக்கும்’னு சொல்லியிருப்பார்.

அவர் சொன்னதுபோல, ஒவ்வொரு துறையிலையும் அவமானங்களும் போராட்டங்களும் இல்லாமல் நம்மால் வெற்றியடைய முடியாது.

அதைப் படிகல்லாக மாத்தித்தான் மேலே ஏறி வரணும். ஏற்கெனவே, நான் பணியில் பொறுப்போடுதான் இயங்கி வர்றேன்.

இந்த விருது எனக்கு இன்னும் கூடுதல் பொறுப்பைத் தந்திருக்குன்னு சொல்லலாம்.

பலரும் எனக்கு அழைத்து வாழ்த்தும்போதுதான் இந்த விருதுடைய முக்கியத்துவம் எனக்குப் புரியுது.

சமூகத்தின் முக்கியமானவர்கள்னு நான் நினைக்கிற அத்தனை பேரும் வாழ்த்துறது இந்த விருதின் எடையைப் பற்றி எனக்கு புரிய வைக்குது.

Lyricist Viveka
Lyricist Viveka

இந்த சமயத்துல ‘போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன், ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன். எவர்வரினும் நில்லேன்! அஞ்சேன்!’ என கண்ணதாசன் ஐயா சொன்னதுதான் எனக்கு இந்த மகிழ்ச்சியான தருணத்துல நினைவுக்கு வருது.

பலர் என்கிட்ட `இந்த விருது உங்களுக்கு எப்பவோ கிடைச்சிருக்கணும்’னு சொல்வாங்க. அதைப் பற்றி நான் எப்போதும் எண்ணினது கிடையாது. விருதுகள்ங்கிறது அந்த நேரத்திற்கான உற்சாகம்னுதான் நான் சொல்வேன்.

இந்த மகிழ்ச்சியான தருணத்துல என்னை சினிமாவுல பாடலாசிரியராக அறிமுகப்படுத்திய இயக்குநர் ராஜகுமாரன் அவர்களுக்கும், தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி அவர்களுக்கும், இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார் அவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.

Lyricist Viveka
Lyricist Viveka

இந்த இனிய தருணத்துல என்னுடைய தாய், தந்தைக்கும் நான் நன்றி சொல்ல விரும்புறேன்.

முக்கியமா, என்னைத் தொடர்ச்சியாக லைம்லைட்டில் வச்சிருக்கிற இயக்குநர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். மகிழ்ச்சி.” என்றபடி முடித்துக்கொண்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *