மதிப்புக்கூட்டல்
மதுரை மாவட்டம், கள்ளிக் குடியில் இயங்கி வருகிறது, சிறுதானிய நளபாகம். காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை செயல்படும் இந்த உணவகத்தில், தினை பால், கம்பு சூப், கேழ்வரகு போளி, வெள்ளைச் சோளக் கொழுக்கட்டை, கறுப்புக் கவுனி ஒல்லி பில்லி சூப், முளைக்கட்டிய பயறு சுண்டல், கம்பு கொழுக்கட்டை, சாமை கிச்சடி, குதிரைவாலி கிச்சடி, கறுப்புக் கவுனி இட்லி, வரகரிசி வெண்பொங்கல், கருங்குறுவை இட்லி, கம்பு புட்டு, வெந்தயக் களி, மாப்பிள்ளைச் சம்பா இட்லி உள்ளிட்ட பலவிதமான பாரம்பர்ய உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
சமைத்த உணவு மட்டுமல்லாமல்… சத்துமாவு கஞ்சி ரெடிமிக்ஸ், சாமை கிச்சடி ரெடிமிக்ஸ், கேழ்வரகு தோசை ரெடிமிக்ஸ், வரகு வெண்பொங்கல் ரெடிமிக்ஸ் உள்ளிட்ட ஆயத்த உணவுப்பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த உணவகத்தின் உரிமையாளரான தமிழ்ச்செல்வி, கடந்த 10 ஆண்டுகளாக, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பர்ய அரிசி வகைகள் மதிப்புக்கூட்டலில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய செயல்பாடுகளுக்கு 2022-ம் ஆண்டு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. `பாரம்பர்யம் சார்ந்த ஆரோக்கிய உணவுப் பொருள்களை மக்களிடம் சிறப்பாகக் கொண்டு சேர்க்கும் வெற்றிகரமான தொழில்முனைவோர்’ என்ற பாராட்டுப் பத்திரத்தை தமிழ்ச்செல்விக்கு நேரில் வழங்கினார், பிரதமர் நரேந்திரமோடி. 10 ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் பள்ளி துணை முதல்வராகப் பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வி, தற்போது, மதிப்புக்கூட்டல் தொழிலில் இறங்கி கவனம் ஈர்த்து வருகிறார்.
தமிழ்ச்செல்வியின் மதிப்புக்கூட்டல் தொழில் அனுபவம் குறித்து அறிந்துகொள்ள, ஒரு காலைப்பொழுதில் அவரைச் சந்தித்தோம்.
“என் அப்பா ராணுவத்துல பணியாற்றினார். நான் பிறந்து, வளர்ந்து படிச்சதெல்லாம் இந்த ஊர்லதான். எம்.எஸ்ஸி, எம்.எட், எம்.ஃபில் பட்டப்படிப்புகள் படிச்சிட்டு, மதுரையில உள்ள தனியார் பள்ளியில கணித ஆசிரியராக 20 வருஷம் வேலை பார்த்தேன். பள்ளி துணை முதல்வராவும் பொறுப்பு வகிச்சேன். என் கணவர் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்திக்கிட்டு இருந்தார். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்காங்க. மதுரை, விரகனூர்ல வசிச்சோம்.
ஆலோசனை சொன்ன பாட்டி…
ஆச்சர்யப்பட்டுப் போனேன்…
என் கணவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு உடல்நலம் பாதிப்படைஞ்சு, பல நாள்கள் ஓய்வுல இருந்தார். நிறைய மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டார். ‘இதை மட்டுமே சாப்பிட்டுக்கிட்டு இருந்தா எப்படி உடம்பு தேறும்… கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, வரகரிசி… இதெல்லாம் கலந்து சத்துமாவு கஞ்சி வச்சுக் கொடு’னு என் பாட்டி சொன்னாங்க. அதை எப்படி தயார் செய்யணும்ங்கறதையும் சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க சொன்ன மாதிரியே, சத்து மாவு கஞ்சி தயார் பண்ணி, என் கணவருக்குத் தினமும் கொடுத்தேன். மூணே மாசத்துல நல்ல முன்னேற்றம் தெரிஞ்சது. உடல் திடகாத்திரம் அடைஞ்சு, சுறுசுறுப்பா பழைய மாதிரி இயங்க ஆரம்பிச்சிட்டார். நான், ரொம்ப ஆச்சர்யப்பட்டுப் போனேன். அப்பதான் சிறுதானியங்களோட மகத்துவத்தை உணர்ந்தேன். நானும் என் குழந்தைகளும் சத்துமாவுக் கஞ்சி குடிக்க ஆரம்பிச்சோம். எனர்ஜியா இருந்துச்சு.
எங்களை மாதிரி மற்றவர்களும் பயன் அடையணும்ங்கற நோக்கத்தோடு, சத்து மாவு தயார் பண்ணி, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்தேன். ‘நல்ல சுவையாவும் வாசனையாவும் இருக்கு. இதை குடிச்சா நாள் முழுக்க உடம்பு தெம்பா இருக்கு’னு பலரும் பாராட்டினதோடு, ‘சத்துமாவு தயார் செஞ்சு, வீட்ல இருந்தபடியே நீ இதை ஒரு தொழிலாவே செய்யலாம். அதிக வரவேற்பு இருக்கும்’னு ஆலோசனை சொல்லி என்னை ஊக்கப்படுத்தினாங்க.
மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆர்டர்…
எங்க குடும்ப நண்பர் ஒருத்தர், அவருக்குத் தெரிஞ்ச ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல 25 கிலோ ஆர்டர் வாங்கிக் கொடுத்தார். முதல் முறையா ஒரு பெரிய கடையில நம்மோட சத்துமாவை விற்பனை செய்யப்போறோம்னு ரொம்ப சந்தோஷமா கொண்டு போய், அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல கொடுத்தேன். எத்தனை பாக்கெட் விற்பனை ஆகியிருக்குனு பார்க்க, ஒரு வாரம் கழிச்சுப் போனேன். ஒரு பாக்கெட்கூட விற்பனை ஆகல. பத்து நாள்கள் கழிச்சு மறுபடியும் போனேன். நான் கொடுத்த பாக்கெட்கள் எல்லாம் அப்படியே இருந்துச்சு. ஆனா, அதே அலமாரியில இருந்த, புகழ்பெற்ற நிறுவனங்களோட சத்துமாவு பாக்கெட்கள் எல்லாம் விற்பனையாகி, அந்த இடமே காலியா கிடந்துச்சு. ஒரு மாசத்துக்கு மேலாகியும், என்னோட சத்துமாவு பாக்கெட்கள் ஒண்ணுகூட விற்பனை ஆகல. இதனால் மனசு வெறுத்துப் போயிடுச்சு.
உறவினர்கள், பொதுமக்கள் எல்லாம் பாராட்டுறாங்க. ஆனா, பொதுமக்கள் நம்மோட பொருள்களை வாங்க மாட்டேங்குறாங்களேனு ரொம்பவே விரக்தி அடைஞ்சுட்டேன். ‘ஏன் இதுல தோல்வி அடைஞ்சோம், என்ன குறைபாடு’னு யோசிக்க ஆரம்பிச்சேன். அந்த நேரத்துலதான் என் மகன் ஒரு முக்கியமான ஆலோசனை சொன்னான். ‘பெரிய நிறுவனங்கள் மாதிரி, நாமும் ஒரு நல்ல பேர் வெச்சு, வசீகரமான பாக்கெட்ல பேக்கிங் பண்ணி, சத்துமாவை விற்பனை பண்ணினா, மக்கள் கண்டிப்பா வாங்குவாங்க’னு சொன்னான்.
வழிகாட்டிய வேளாண் கல்லூரி…
மதுரை, ஒத்தைக்கடையில உள்ள அரசு வேளாண் கல்லூரியில இதுக்கான பயிற்சி கொடுக்குறாங்கனு கேள்விப்பட்டு அங்கே போனேன். அங்கு செயல்படும் மதிப்புக்கூட்டும் மையத்துல 2 நாள்கள் பயிற்சி கொடுத்தாங்க. நிறைய விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன். அவங்களோட வழிகாட்டுதல்களோடு, ஐ.எஸ்.ஓ (ISO) மற்றும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) தரச் சான்றிதழ்கள் பெற்று, ‘தமிழ் ஃபுட்ஸ்’ங்கற பேர்ல வசீகரமான பேக்கிங்ல, எங்களோட சத்துமாவு கஞ்சி ரெடிமிக்ஸ் விற்பனை செய்யத் தொடங்கினோம். மதுரையில உள்ள மளிகைக் கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ், சூப்பர் மார்க்கெட் மற்றும் இயற்கை அங்காடிகள்ல எங்களோட பொருள் விறுவிறுப்பா விற்பனையாக ஆரம்பிச்சது.
எதிர்பாராத அழைப்பு…
தேடி வந்த உதவி…
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காதி, கிராமத் தொழில்கள் ஆணையத்துல பணியாற்றக்கூடிய அலுவலர்கள் சிலர், எங்களோட தயாரிப்பான ‘தமிழ் ஃபுட்ஸ்’ சத்துமாவு கஞ்சி ரெடிமிக்ஸை ஒரு சூப்பர் மார்கெட்ல வாங்கிப் பயன்படுத்திப் பார்த்திருக்காங்க. அது, அவங்களுக்கு ரொம்ப புடிச்சுப் போனதால, மதுரையில உள்ள தங்களோட அலுவலகத்துக்கு எங்களை வரச் சொன்னாங்க. ஆர்டர் கொடுக்கத்தான் கூப்பிடுறாங்கனு நினைச்சேன். எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் பத்தியோ… காதி, கிராமத் தொழில்கள் ஆணையம் பத்தியோ அதுக்கு முன்னாடி நான் கேள்விப்பட்டதே கிடையாது.
அந்த ஆணையத்தின் உதவி இயக்குநரா பணியாற்றிய நல்லபெருமாள், ‘நீங்க, இந்தச் சமூகத்துக்கு பயன் அளிக்கக்கூடிய, ஒரு நல்ல காரியம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. வீட்ல குடிசைத் தொழில் மாதிரி இதைச் சின்ன அளவுல செஞ்சா போதாது. நீங்க தயார் செய்யக்கூடிய சிறுதானிய சத்துமாவு கஞ்சி நிறைய மக்களுக்குப் போய் சேரணும். உங்களுக்கு எந்த வகையில எங்களோட ஆதரவு தேவை’னு கேட்டார். அவர் என்ன கேட்குறாருனு எனக்கும் என் கணவருக்கும் எதுவுமே புரியலை. தொழில்முனைவோர் களுக்கு மத்திய அரசு வழங்கும் கடன் திட்டங்கள் பத்தி எடுத்துச் சொன்னார்.
35 சதவிகிதம் மானியம்…
எங்களோட தொழிலை பெரிய அளவுல விரிவுபடுத்த, கடன் வழங்குறதுக்காகத்தான் எங்களை வரச் சொல்லியிருக்காங்க என்கிற விஷயம் பிறகுதான் தெரிஞ்சது. 35 சதவிகிதம் அரசு மானியத்துல 25 லட்சம் ரூபாய் கடன் தரத் தயாரா இருந்தாங்க. அதிகமா கடன் வாங்க வேண்டாம்னு, 15 லட்சம் ரூபாய் மட்டும் வாங்கினோம்,
சிறுதானியங்கள் மதிப்புக்கூட்டலையே முழுநேர தொழிலா செய்யப்போறோம்னு முடிவெடுத்ததும், தனியார் பள்ளி துணை முதல்வர் பணியை ராஜினாமா செஞ்சுட்டேன். கிராமப்புற பெண்களுக்கு வேலை கொடுக்கணும்… அதேசமயம் நம்ம சொந்த ஊர்ல இந்தத் தொழிலை செய்யணும்னு முடிவெடுத்து, 2017-ம் வருஷம், கள்ளிக்குடியில நவீன கட்டமைப்பு வசதிகளோடு மதிப்புக்கூட்டல் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கினேன். என் கணவரும் முழுநேரமா இதுல உழைப்பை செலுத்த ஆரம்பிச்சார்.
வெளிமாநிலங்களுக்கும் விநியோகம் செய்றோம்…
அதிநவீன இயந்திரங்கள் மூலம், சிறுதானிய சத்துமாவு கஞ்சி ரெடிமிக்ஸ் உற்பத்தியை பல மடங்கு அதிகரிச்சதோடு… சாமை கிச்சடி ரெடிமிக்ஸ், கேழ்வரகு தோசை ரெடிமிக்ஸ், வரகு வெண்பொங்கல் ரெடிமிக்ஸ், கேழ்வரகு புட்டு மாவு, வரகரிசி புட்டு மாவு, எள்ளுருண்டை, தினை உருண்டை உள்ளிட்ட இன்னும் பல வகையான மதிப்புக்கூட்டல் பொருள்கள் தயார் பண்ணி விற்பனை செய்ய ஆரம்பிச்சோம்.
தமிழ்நாட்டுல உள்ள பல மாவட்டங் களுக்கும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் எங்களோட பொருள்களை விநியோகம் பண்ணிக்கிட்டு இருக்கோம். எங்களுக்குத் தேவையான சிறுதானியங்கள் மற்றும் பாரம்பர்ய அரிசி வகைகளை இயன்றவரைக்கும் விவசாயிகள் கிட்ட இருந்து நேரடியா கொள்முதல் செய்றோம். ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, இதே ஊர்ல நளபாகம் உணவகத்தைத் தொடங்கினோம். உளுந்தங்களி, வெந்தயக் களி, தினை பால், கம்பு சூப், கேழ்வரகு போளி, வெள்ளைச் சோளக் கொழுக்கட்டை, கறுப்புக் கவுனி ஒல்லி பில்லி சூப், முளைக்கட்டிய பயறு சுண்டல், கம்பு கொழுக்கட்டை, சாமை கிச்சடி, குதிரைவாலி கிச்சடி, கறுப்புக் கவுனி இட்லி, வரகரிசி வெண்பொங்கல், கறுங்குறுவை இட்லி, கம்பு புட்டு, வெந்தயக் களி, மாப்பிள்ளைச் சம்பா இட்லி உள்ளிட்ட உணவு வகைகளை விற்பனை செய்றோம்.
வேலைவாய்ப்பு…
மதிப்புக்கூட்டல் நிறுவனம், நளபாகம் உணவகம் இந்த இரண்டுலயும் சேர்த்து மொத்தம் 15 பேர் வேலை பார்க்குறாங்க. ஒரு மாசத்துக்கு தலா 1 டன் சிறுதானியங்களும், பாரம்பர்ய அரிசி வகைகளும் கொள்முதல் செய்றோம். 100-க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டல் பொருள்கள் விற்பனை மூலம் வருஷத்துக்கு 75 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்குது. இதுல, எல்லா செலவுகளும் போக 20 சதவிகிதம் லாபம் கிடைக்குது” என தெரிவித்தார்.
தொடர்புக்கு: தமிழ்ச்செல்வி,
செல்போன்: 99764 88779

கடனைத் திருப்பி அடைச்சுட்டோம்…
“காதி, கிராமத் தொழில்கள் ஆணையம் மூலம் வாங்கின, 15 லட்சம் ரூபாய் கடனை, அடுத்த 7 வருஷத்துல திருப்பி அடைச்சுட்டோம். இப்ப எங்களுக்கு 1 கோடி ரூபாய் வரைக்கும் கடன் தர அந்த நிறுவனத்தினர் தயாரா இருக்காங்க” என்கிறார் தமிழ்ச்செல்வி.
நெகிழ்ச்சியான தருணம்…
“2022-ம் வருஷம், மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் சார்புல பல மாநிலங்கள்ல இருந்தும், மொத்தம் 13 தொழில்முனைவோர்களைத் தேர்ந்தெடுத்து, பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்க வச்சாங்க. தமிழ்நாட்டுல இருந்து நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ‘பாரம்பர்யம் சார்ந்த ஆரோக்கிய உணவுப்பொருள்களை, மக்களிடம் சிறப்பாகக் கொண்டு சேர்க்கும் வெற்றிகரமான தொழில்முனைவோர்’ங்கற பாராட்டுப் பத்திரத்தை, பிரதமர் மோடி எனக்கு வழங்கினார். அது ஒரு நெகிழ்ச்சியான தருணம். காதி, கிராமத் தொழில்கள் ஆணையத்தின் பரிந்துரையிலதான் எனக்கு அவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைச்சது” என்றார் தமிழ்ச்செல்வி.