
சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில், வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்களை வெளியிடும் திரை விமர்சகர்களை கடுமையாக சாடியிருந்தார் ‘மெய்யழகன்’ இயக்குநர் பிரேம் குமார். தற்போது ‘மெய்யழகன்’ படம் வெளியாகி ஒராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதிலும் விமர்சகர்களை கடுமையாக சாடியிருக்கிறார்.
அதில் இயக்குநர் பிரேம் குமார், “பல பேர் என்னிடம் சொன்னது என்னவென்றால், ‘மெய்யழகன்’ படத்தை மலையாளத்தில் எடுத்திருக்கலாம் என்றார்கள். வெளியில் இருந்து படம் வந்தால் இங்கு தூக்கிவைத்து கொண்டாடுவர்கள், அதை நீங்கள் இங்கு செய்ததுதான் தப்பு என்றார்கள். என் மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு படத்தை, வேறு மொழியில் எடுத்தால் இங்கு கொண்டாடுவார்கள் என்றபோது ரொம்ப கஷ்டமாக இருந்தது.
இங்கு விமர்சகர்கள் சொல்லும் கருத்தினை, சாதாரண மக்களும் ஏற்றுக்கொள்ள தொடங்குகிறார்கள். திரையரங்குகளில் நாங்கள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், ஓடிடி மூலம் தப்பித்துவிட்டோம். உண்மையில் படம் சரியில்லை என்றால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அது உண்மைதானே. முன்பு பைரசி திரையுலகுக்கு ஒரு பெரிய ஆபத்தாக இருந்தது. அதைவிட பெரிய ஆபத்து இந்த மாதிரியான நெகட்டிவ் விமர்சகர்கள்தான். அவர்களை நிறுத்தவே முடியாது.