
‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற மலையாள நடிகர் மோகன் லாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
1978 ஆம் ஆண்டு ‘திறநோட்டம்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் மோகன் லால் மலையாளத் திரையுலகின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
‘லாலேட்டா’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மோகன் லால் மலையாளம் தவிர தமிழ்,தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 400 படங்களுக்கும் மேல் அவர் நடித்திருக்கும் இவர் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர் என பலத் துறைகளிலும் அசத்தி வருகிறார்.
இந்நிலையில்தான் மோகன் லாலுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்திருக்கிறது.
‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற மோகன் லாலுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” என் அன்பு நண்பர் லாலேட்டன் (மோகன் லால்) தாதாசாகேப் பால்கே விருதால் கௌரவிக்கப்பட்டதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அவரது கலை பல மில்லியன் மக்களின் மனங்களைத் தொட்டிருக்கிறது. மேலும் வருங்கால தலைமுறைகளுக்கும் அது ஊக்கமாக இருக்கும். அவர் இந்த உயரிய அங்கீகாரத்திற்கு தகுதிப் பெற்றவர்தான்” என்று வாழ்த்தியிருக்கிறார்.