
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டோவாவை மேற்குலக நாடுகள் ஆக்கிரமிக்கப் போவதாகவும் அதற்கான நேட்டோவின் படை உக்ரைனின் ஒடெசா பிராந்தியத்துக்கு வர தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளிநாட்டு உளவு அமைப்பு (SVR) தெரிவித்துள்ளதாக ஸ்புட்னிக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மல்டோவாவில் ரஷ்ய ஆதரவாளர்கள் கைது
ரஷ்யா-ஐரோப்பா மோதலில் முக்கிய இடமாக மாறி வருகிறது மால்டோவா. முன்னாள் சோவியத் நாடான இங்கு, வெகுஜன எழுச்சியை நடத்த ரஷ்யா ஆதரவுடன் சதித்திட்டம் தீட்டியதாக 74 பேரை மால்டோவா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மால்டோவாவில் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி பிரதான தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் ரஷ்யா ஏதாவது ஒரு கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கலாம் அல்லது புதின் தேர்தல் மோசடியில் ஈடுபடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த தேர்தல் மால்டோவா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான பணிகளைத் தொடர்வதா அல்லது ரஷ்யாவுக்கு ஆதரவு வழங்குவதா என்ற முக்கிய முடிவுக்கு வழிவகுக்கும் ஒன்றாக அமையும்.
கலவரம் நடத்த திட்டம்?
மால்டோவா உக்ரைன் மற்றும் ரோமானியா நாடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. மால்டோவாவைக் கைப்பற்ற நேட்டோ படைகள் ரோமானியா எல்லையில் குவிக்கப்படுவதாகவும் உக்ரைனில் தரையிறங்க முயற்சித்து வருவதாகவும் ரஷ்யா தரப்பில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
முன்னாள் சோவியத் நாடான உக்ரைன் நேட்டோவில் இணைய விரும்பியதே மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நடக்கும் போருக்கு தொடக்கமாக அமைந்தது. அதுபோலவே மால்டோவாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மால்டோவாவில் தேர்தலுக்குப் பிறகு பெரும் கலவரம் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக 100 பேரைக் குறிவைத்து 250க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தியது மால்டோவா காவல்துறை. 19 முதல் 45 வயதுடைய எழுபத்து நான்கு பேர் 3 நாட்கள் வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த கலவரத்தை நடத்த ரஷ்யா குற்றவாளிகளுக்கு செர்பியாவில் பயிற்சி கொடுத்து அவர்களது வலைப்பின்னலைப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது. ரஷ்யா மில்லியன் கணக்கான யூரோக்களை செலவு செய்து மால்டோவாவை விலைக்கு வாங்கப்பார்ப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி மையா சாண்டு தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி ஐரோப்பாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்க, ரஷ்ய தலையீடு இல்லாமல், நேர்மையான வழியில் இந்த தேர்தல் நடத்தி முடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் ரீதியாக ஜனாதிபதி மையா சாண்டுவின் ‘ஐரோப்பிய ஒன்றிய சார்பு’, செயல் மற்றும் ஒற்றுமைக் கட்சி (PAS) மற்றும் ரஷ்ய சார்பு அமைப்பான தேசபக்த தேர்தல் தொகுதி இடையேயான போட்டியாகத்தான் இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.
மால்டோவாவில் 15%க்கும் மேல் ரஷ்ய மொழி பேசுபவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.