• September 24, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் 5 கோடியே 79 லட்சத்து 50 ஆயிரத்து 543 ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா 400 பேருக்கும், 1 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரத்து 80 ரூபாய் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா 219 ஆதிதிராவிடருக்கும்,

16 பேருக்கு 3 கோடியே 13 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வங்கிக் கடன்களையும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு 27 லட்சத்து 58 ஆயிரம் என மொத்தம் 837 பேருக்கு ரூபாய் 10 கோடியே 84 லட்சத்து 24 ஆயிரத்து 129 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், 124.57 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 25.89 கோடியில் முடிவுற்ற 5 பணிகளைத் துவக்கி வைத்தார். இதில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவி

இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “இங்கு உள்ளவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி திராவிட மாடல் அரசின் வெற்றிக்குச் சாட்சி. தமிழகம் முழுவதும் பட்டா வழங்கினாலும், விருதுநகரில் வழங்குவதில் சிறப்பு என்னவென்றால் ஒருபுறம் நிதி கொடுக்கும் அமைச்சர், மற்றொரு புறம் இடம் கொடுக்கும் அமைச்சர் என்பது இம்மாவட்டத்தின் சிறப்பு.

இந்த இரண்டு அமைச்சர்களால் விருதுநகர் மாவட்டம் பலமடங்கு வளர்ந்துள்ளது. 4.½ ஆண்டுகளில் மொத்தம் 19 லட்சம் பட்டாக்களை வழங்கியது மிகப்பெரிய சாதனை. பட்டா பற்றிய உங்களின் பயத்தையும், பதற்றத்தையும் மகிழ்ச்சியாக முதல்வர் மாற்றி உள்ளார். உங்கள் பலநாள் கனவு நிறைவேறுகிறது. பட்டா மட்டுமல்ல கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட ஆணையும் வழங்கியுள்ளோம்.

நலத்திட்ட உதவி

தமிழ்நாட்டின் பெருமையாக அங்கீகாரமாக சுயஉதவிக்குழு இருக்கிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சந்திக்கச் சொல்லி எனக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சந்தித்து வருகிறேன். தற்போது அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வருகிறோம்.

விரைவில் விருதுநகர் மாவட்டத்தில் அடையாள அட்டை வழங்குவோம். பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பல நலத்திட்டங்கள் உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ளவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் விருப்பம்.

மகளிர் முன்னேற்றத்திற்கு முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை வழங்கி உள்ளார். இதுவரை மகளிர் விடியல் பயணத்தின் மூலம் தமிழகத்தில் 780 கோடி பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 50 லட்சம் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் மாதம் 900 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை சேமித்துள்ளனர். அரசுப் பள்ளி பயின்ற 8 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி பயில கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 22 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

கைவினைப் பொருட்கள்
கைவினைப் பொருட்கள்

முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 22 லட்சம் மாணவர்கள் தரமான காலை உணவை உண்கிறார்கள். இங்கு மட்டும் 72,400 பேர். மகளிர் உரிமைத் தொகையை 1 கோடி 20 லட்சம் பேர் மாதம் 1000 ரூபாய் பெறுகின்றனர். தற்போது விதிகளை முதல்வர் தளர்த்தியுள்ளார்.

விண்ணப்பித்தவர்களுக்கு ஓரிரு மாதங்களில் வழங்கப்படும். இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழக மக்களுக்காக முதல்வரை மேலும் பல திட்டங்களை வழங்கத் தயாராக உள்ளார். இதனால் 2026 ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் எங்களுக்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *