• September 24, 2025
  • NewsEditor
  • 0

ஷின் சான்

இந்தியாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஜப்பானிய அனிமேஷன் தொடர் ஷின் சான்.

5 வயது சிறுவனின் வாழ்க்கையை காட்டும் இந்தத் தொடரானது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஃபேவரைட்டானதாக உள்ளது.

Shin Chan: The Spicy Kasukabe Dancers in India

இந்த நிலையில் ஷின் சானை பிரதானமாக இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் இயக்குநர் மசகாசு ஹாஷிமோடோ.

ஷின் சான்: தி ஸ்பைசி கசுகபே டான்சர்ஸ் இன் இந்தியா” (Shin Chan: The Spicy Kasukabe Dancers in India) திரைப்படம் திரையரங்குகளில் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நடனப் போட்டிக்காக இந்தியா வரும் ஷின் சான் மற்றும் அவரது நண்பர்கள் காசுகாபே என்ற தீய சக்தியை எதிர்த்துப் போராடுவதாகத் திரைப்படம் அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

தணிக்கை நல்லது!

யோஷிடோ உசுயின் மங்கா தொடரான ஷின் சான் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் சில காட்சிகள் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி என்ற எல்லையை மீறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததுண்டு.

இதுகுறித்துப் பேசிய இயக்குநர்,

“எனக்கு இந்தியாவில் இருக்கும் சென்சார்ஷிப் குறித்துத் தெரியாது, ஆனால் ஷின் சான் கடந்த சில ஆண்டுகளாக மாறிவருகிறது.

ஜப்பானில் தணிக்கை இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்கு எது சரியாக வரும் என்ற விதிகள் உள்ளன. அது குழந்தைகளைப் பாதுகாப்பதனால் மோசமானதாகக் கருத அவசியமில்லை” எனக் கூறியுள்ளார்.

Sin Chan - Muthu - Masakazu Hashimoto
Sin Chan – Muthu – Masakazu Hashimoto

“உதாரணமாக எனக்கு குழந்தைகள் உள்ளனர். நான் அவர்கள் பின்புறத்தை (ஷின் சான்) காட்ட வேண்டாம் என அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஷின் சான் குழந்தைகளின் ஹீரோ. அவன் என்ன செய்தாலும் அதை அப்படியே குழந்தைகள் காப்பி அடிக்கின்றனர். அதனால் இந்த மாற்றங்கள் நல்லதுதான் என நினைக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அனிமேஷன் படங்கள்

இந்தியாவில் அனிமேஷன் படங்களைப் பொறுத்தவரை, கோட்டோஜ் கோயோஹாருவின் மங்கா தொடரை அடிப்படையாகக் கொண்ட ஹருவோ சோட்டோசாகியின் ‘டெமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யாய்பா’ திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 11 நாட்களுக்குள் ரூ. 63 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

செப்டம்பர் 12 அன்று பல நேரடி-அதிரடி இந்தி படங்களை விட இது பெரிய அளவில் வெளியானது.

Mahavatar Narsimha
Mahavatar Narsimha

இந்திய அனிமேஷன் படங்கள் இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், இந்த ஆண்டு வெளியான அஸ்வின் குமாரின் புராண அனிமேஷன் படமான மஹாவதர் நரசிம்ஹா இந்தியாவில் மட்டும் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்து, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த இந்திய அனிமேஷன் படமாக சாதனை படைத்துள்ளது.

இது புதிய மார்க்கெட்டின் தொடக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நான் பார்த்த முதல் இந்திய திரைப்படம் முத்து”

மறுபக்கம் இந்திய சினிமா ஜப்பானிய மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. மசகாசு ஹாஷிமோடோ கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்-மீனா நடித்த முத்து திரைப்படம்தான் தான் பார்த்த முதல் இந்தியத் திரைப்படம் என்கிறார்.

முத்து படத்தில் ரஜினி
முத்து படத்தில் ரஜினி

“Muthu: The Dancing Maharaja தான் நான் பார்த்த முதல் இந்திய திரைப்படம். அப்போதுமுதலே ஷின் சான் இந்தியாவுக்குப் பொருத்தமாக இருக்கும் என எண்ணினேன். ஷின் சான் இங்கு வந்தால் அவனுக்கு ஒரு இடம் கிடைக்கும் என எனக்குத் தெரியும்.” என்றார்.

1998ஆம் ஆண்டு ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான முத்து திரைப்படம் 2015ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி வெளியாகும் வரை, ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்தியப் படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *