
கொங்கு மண்டலம்
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் என்றால் வியூகங்கள் இருப்பது வழக்கம்.
அதில் மாற்றுக் கட்சியினரை தங்களின் கட்சிக்கு இழுத்து மற்ற கட்சிகளுக்கு நெருக்கடி கொடுப்பது முக்கியமானது.
கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கொங்கு மண்டலம் திமுகவுக்கு சாதகமாக இருந்ததில்லை. இந்த முறை அதை சரி கட்டுவதற்காக திமுக கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமனம் செய்துள்ளது.
பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகிகள்
பொதுவாக மாற்றுக் கட்சியினரை திமுகவுக்கு இழுப்பதில் செந்தில் பாலாஜி கைதேர்ந்தவர். ஆனால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை அருகே உள்ள சிங்காநல்லூர் ஊராட்சியில் திமுக நிர்வாகிகள் அந்தக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.

சிங்காநல்லூர் ஊராட்சிக்கு 3 முறை தலைவராக இருந்த ரமேஷ் தன் ஆதரவாளர்களுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
அவருடன் சேர்த்து, அவரின் ஆதரவாளர்கள் மற்றும் சில திமுக நிர்வாகிகளும் பாஜகவில் இணைந்துள்ளனர்.
என்ன காரணம்?
இதுகுறித்து ரமேஷிடம் பேசியபோது, “நான் 1994-ம் ஆண்டில் இருந்து திமுகவில் இருக்கிறேன். அப்போது எங்கள் ஊரில் திமுக கட்சியே இல்லை. அப்போது பூத்தில் அமர்வதற்கு கூட ஆள் இல்லை.
கிளைச் செயலாளர், ஒன்றிய துணைச் செயலாளர், வர்த்தக அணி துணை அமைப்பாளர், 3 முறை ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருந்துள்ளேன்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது கூட நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த யுவராஜ் என்பவரை ஆனைமலை ஒன்றிய செயலாளராக நியமனம் செய்தனர்.
உள்கட்சித் தேர்தலில் அவருக்கு இந்த ஒன்றியத்தில் ஒரு ஓட்டு கூட விழவில்லை. அவரை ஒன்றிய செயலாளராக்கியுள்ளனர்.
யுவராஜ் திமுகவுக்கு வந்தவுடன், நாங்கள் அதிமுகவில் யாரை எல்லாம் எதிர்த்து அரசியல் செய்தோமோ அவர்களை திமுகவில் இணைத்து பதவி கொடுத்தார். அவர்களுக்கு கான்ட்ராக்ட் உள்ளிட்டவை வழங்கினார்.
இதைத் தட்டிக்கேட்ட நான், எங்கள் மீது பொய் புகார் கொடுத்து காவல்துறையில் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து மாவட்டச் செயலாளர், செந்தில் பாலாஜி, அறிவாலய நிர்வாகிகள் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.


இதுபோன்ற செயல்களால் இனியும் திமுகவில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டோம். தற்போது நான் உள்பட 500 பேர் கட்சியில் இருந்து விலகிவிட்டோம்.
அதிமுகவில் இருந்து வந்தவர்கள் மட்டும்தான் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான். காலம் காலமாக திமுகவுக்கு உழைத்தவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்,” என்றார்.