
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க எனும் கட்சி பல துண்டுகளாக சிதறியது. இதில் ஆரம்பத்தில் கூடுதல் கவனம் பெற்றது சசிகலா தரப்பு.
ஆனால், காலப்போக்கில் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க பலம்பெற்று, தற்போது நிலைபெற்றிருக்கிறது.
இதற்கிடையில், தொடர்ந்து அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற குரல் ஒவ்வொரு தரப்பிலிருந்தும் எழுந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமியைத் தவிர, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பினர் அ.தி.மு.க ஒருங்கிணைப்புக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
அதே நேரம், தற்போது செங்கோட்டையனும் தனி அணியாகப் பிரிகிறாரா என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
இந்த நிலையில், சசிகலா தரப்பில் சசிகலாவைத் தவிர மற்றவர்கள் யாரும் மக்களுக்குப் பெரிதாகப் பரிச்சயம் இல்லாமல் இருந்தனர்.
அதில் விதிவிலக்காக வந்தவர் வெண்மதி. சசிகலா செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, அவருடன் இருந்துகொண்டு, அவரின் பேச்சுக்கு உடனடி ரியாக்ஷன் கொடுத்துக்கொண்டிருப்பார். இது இயல்பாக நடந்ததால், சமூக ஊடகங்களில் யார் இந்தப் பெண் எனத் தேடல் தொடங்கியது. அதே நேரம், வெண்மதி மீம் கண்டென்ட் ஆனார்.
அதனால் கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் வைரலானார். அப்போதுதான் அவர் நெல்லை மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவின் முன்னாள் இணை செயலாளர் வெண்மதி என்பதும், அ.தி.மு.க பிரிவுக்குப் பிறகு சசிகலாவின் தீவிர ஆதரவாளராக மாறினார் என்பதும் தெரியவந்தது.
சசிகலா திருநெல்வேலி, தென்காசி போன்ற பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதுகூட அவருக்கான ஏற்பாடுகளைச் செய்தவர் வெண்மதி.
இதற்கிடையில், கடந்த சில மாதங்களாகவே வெண்மதியை சசிகலாவுடன் பார்க்க முடியவில்லை. தொடர்ந்து சசிகலாவை சந்திப்பதையும் தவிர்த்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில்தான் வெண்மதி தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார்.
அதில், “நான் மீம்ஸில் வந்தது பெரும் மகிழ்ச்சி அளித்தது. என்றாலும், தேவையற்ற சில மீம்ஸ்களாலும் நானும், என் குடும்பமும் வருந்தினோம்.
அப்போதெல்லாம் சசிகலாதான், இதற்கெல்லாம் கவலைப்படக் கூடாது. விமர்சனங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என ஆறுதல் கூறினார்.
ஆனால், இப்போது நான் சசிகலா அணியில் இல்லை. கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு சசிகலா சிலரால் சூழப்பட்டிருக்கிறார். அதிக நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

அதனால், அவரின் அரசியல் செயல்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை. அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சசிகலா பின்வாங்குவதால் பெரும் அதிருப்தியில் இருந்தேன்.
அதனால், அவரிடமிருந்து விலகிவிட்டேன். சசிகலா கட்சியை ஒருங்கிணைப்பார் என்ற தொண்டர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டார். கட்சியை யார் பிரித்தார்கள் என்பது உலகத்துக்கே தெரியும்.
இனியும் தனிப்பட்ட ஈகோ காரணமாக கட்சியை காப்பாற்றாமல் விடுவது ஆபத்து.” எனப் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.