• September 24, 2025
  • NewsEditor
  • 0

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒவ்வொரு நகர்வுகளும் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அக்கட்சி எடுக்கவுள்ள அதிரடி முடிவுகள் என்ன? தி.மு.க-விடம் கேட்கப் போகும் தொகுதிகள் எத்தனை? அதேபோல், அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து அம்பேத்கர் திடல் புள்ளிகளிடம் விரிவாக விசாரித்தோம்.

ஸ்டாலின், திருமாவளவன், வீரமணி

அமைப்பு மாற்றத்துக்கு தயாராகும் வி.சி.க!

நம்மிடம் பேசிய வி.சி.க மாநில நிர்வாகிகள் சிலர், “வட மாவட்டங்கள் மட்டுமில்லாமல், தமிழ்நாடு முழுக்கவே கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த விரும்புகிறார் திருமா. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக 2023 செப்டம்பரில், 88 ஆக இருந்த மாவட்டச் செயலாளர் எண்ணிக்கையை 144 ஆக உயர்த்தினார். அதிலும் வன்னியர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு தலா 10% ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் 234 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவுள்ளோம். இதனால் உட்கட்சிப் பிரச்னைகள் உருவாகும் அபாயம் இருந்தாலும் ‘Decentralisation of Power’ என்பதை இலக்காகக் கொண்டிருக்கிறோம். புதிய மாவட்டச் செயலாளர்களின்மூலம் மத்திய, தென் மாவட்டங்களில் பூத் கமிட்டியை வலுப்படுத்தவுள்ளோம். கூடுதலாகத் தொகுதிவாரியாக துணை மா.செ-க்களையும், தொகுதிக்கு ஒரு செய்தித் தொடர்பாளரையும் தேர்ந்தெடுக்கவுள்ளோம்” என்றனர்.

கட்சிப் பொதுச்செயலாளர்களுடன் திருமாவளவன்

தொடர்ந்து பேசியவர்கள், “கொரோனா காலத்தில் கட்சியின் பொருளாளர் யூசப் மறைவையடுத்து பொருளாளர் பொறுப்பும், தலித் அல்லாதவர்களுக்கான ஒரு பொதுச்செயலாளர் பொறுப்பும் காலியாக இருக்கின்றன. கட்சிக்குள் தலித் அல்லாத முகங்களாக துணைப் பொதுச்செயலாளர்கள் ஆளூர் ஷாநவாஸும், எஸ்.எஸ் பாலாஜியும் இருப்பதால் இருவருக்குமே முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம். அதேநேரம் பெண் ஒருவரைப் பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முளைத்திருக்கிறது. தலித் அல்லாதவர்களையும் பெண்களையும் முக்கியப் பொறுப்புக்குக் கொண்டுவந்து பொதுநீரோட்டத்தில் நிற்கும் கட்சி என நிறுவ வேண்டிய தேவையும் வி.சி.க-வுக்கு இல்லாமல் இல்லை” என்றனர்.

‘வேட்பாளர் தேர்வு.. யாருக்கு கல்தா?’

தொடர்ந்து பேசிய நிர்வாகிகள், “வரும் சட்டமன்றத் தேர்தலில், 6 முதல் 8 தொகுதிகளை வி.சி.க-வுக்கு ஒதுக்கும் மனநிலையில் இருக்கிறது அறிவாலயம். 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சிந்தனை செல்வன், ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, வன்னி அரசு, கெளதம சன்னா, பனையூர் பாபு ஆகிய ஆறுபேரும் மீண்டும் போட்டியிட மும்முரம் காட்டினாலும், புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், அந்த லிஸ்ட்டில் பனையூர் பாபு, கெளதம சன்னா இருவரைத் தவிர மற்றவர்களுக்கு ரூட் க்ளியர். கூடுதலாக, பெண்கள் கோட்டாவில் ஏழில் கரோலின் சீட் பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் திருமாவளவன்

தென்மாவட்ட முகமாக இருக்கும் கனியமுதன், கடலூர் மாமன்ற உறுப்பினர் செல்வ புஷ்பலதா, தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரும் சீட்டுக்கு அடிபோடுகிறார்கள். கடந்தமுறை வானூரில் வெற்றிவாய்ப்பைத் தவறவிட்ட வன்னி அரசு திண்டிவனத்தில் கவனம் செலுத்துகிறார். வி.சி.க வசமுள்ள செய்யூர் தொகுதியில் பனையூர் பாபுவை விஞ்சி ஏழில் கரோலின் களம்காண விரும்புகிறார். காட்டுமன்னார்கோவிலில் சிந்தனைச் செல்வன் போட்டியிடுவதில் மாற்றமில்லை. ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி ஆகியோரைப் பொறுத்தவரை, தொகுதி மாறினாலும் மாறாவிட்டாலும் தேர்தல் களமிறங்கத் தயாராக இருக்கிறார்கள்” என்றனர்.

“மாநாட்டுக்கு தயாராகும் திருமா…!”

2024 ஜனவரியில் வெல்லும் ஜனநாயக மாநாட்டையும், அக்டோபரில் மதுஒழிப்பு மாநாட்டையும் திராவிடக் கட்சிகளுக்கு இணையாக நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதேபோல் 2026 தேர்தல் நெருக்கத்திலும் மதச்சார்பின்மையை மையமாகக் கொண்டு வட மாவட்டங்களில் மாநாடு நடத்த திட்டமிடுகிறது. புதுவரவான விஜய் வந்தபிறகு வி.சி.க-வின் இளைஞர் கூட்டம் அணிமாறிவிட்டது என்ற விமர்சனத்தை உடைக்கும் விதமாக இம்மாநாடு நடத்தப்படலாம் எனக் கிசுகிசுக்கப்படுகிறது. மாநாட்டை முடித்த கையோடு வி.சி.க போட்டியிடும் தொகுதிகளில் உட்பட வட மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை திருமாவளவன் தொடங்கும்படி திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

விசிக மது ஒழிப்பு மாநாடு

தொடர்ந்து பேசிய அவர்கள் “பெரிய நெருக்கடிகள் எதையும் தராமல், கூட்டணிக்கு பக்கபலமாக இருந்து கட்சியையும் திருமாவளவன் வலிமைப்படுத்தினாலும் அறிவாலயம் கூடுதல் தொகுதிகள் தருவதிலும், அதிகாரப் பகிர்வை சாத்தியப்படுத்தாமல் இருப்பதிலும் ஓரவஞ்சனை காட்டுவது நிர்வாகிகளை வருத்தமடையச் செய்கிறது” என்றனர்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *