
பாட்னா: ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பிஹாரில் இண்டியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஆர்ஜேடி கட்சிக்கு 3 முறை கடிதம் எழுதியபோதிலும் அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் அண்மையில் கூறுகையில், எங்களுக்கு 6 இடங்கள் போதும். அமைச்சர் பதவி தேவையில்லை என்றோம். இதற்கு மேல் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்றார். இந்நிலையில் பிஹாரில் ‘சீமாஞ்சல் நியாய யாத்திரை' என்ற பெயரில் 3 நாள் பிரச்சாரத்தை ஒவைசி நேற்று தொடங்கினார். இதன் மூலம் பிஹாரில் அவர் தனித்து போட்டியிடுவார் என்று தெரிகிறது. பிஹாரில் கடந்த 2020 தேர்தலில் ஒவைசி 25 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றார்.