• September 24, 2025
  • NewsEditor
  • 0

எம்.பி-கள் கூட்டம்:

சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. எப்போதுமே நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக திமுக எம்.பி-களை சந்தித்து முதல்வர் பேசுவது வழக்கம். தற்போது எந்த கூட்டத்தொடரும் இல்லாத நிலையில் சந்திப்பு ஏற்பாடு செய்ததே பேசுபொருளானது. இந்த நிலையில் அனைத்து உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்துக் கலந்துகொண்ட எம்.பி-க்கள் சிலரிடம் பேசினோம். “கூட்டத்தொடர் இல்லாத சமயங்களில் முதல்வர் எங்களை அழைத்துப் பேசுவது எங்களுக்கே புதிதான ஒன்றாக இருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

பெரும்பாலான உறுப்பினர்களுக்கு எதற்கான கூட்டம் என்பது கலந்துகொள்ளும் வரையில் தெரியவில்லை. கூட்டத்தில் பேசிய முதல்வர் ‘தேர்தல் நெருங்குகிறது. இங்கிருக்கும் அனைவருமே கடுமையாக வேலை செய்யவேண்டும். நாடாளுமன்ற கூட்டம் இல்லைன்னு சொல்லி வீட்டிலிருந்துவிட கூடாது. இங்க இருக்கும் 33 உறுப்பினர்களுக்கும் தலைமை கழகம் மிகமுக்கிய பணிகளைக் கொடுக்கப் போகிறது. ஒவ்வொருவருக்குமே ஒரு ஃபைல் கொடுக்கப்படும். அதில் சில தொகுதிகளின் பெயர்கள் இருக்கும். அந்த தொகுதிகளில் நீங்கள் சென்று வேலை பார்க்கணும். அந்த தொகுதி நிர்வாகிகள் தொடங்கி மாவட்டச் செயலாளர் வரை அனைவரோடும் ஒத்துழைத்து பணியாற்றவேண்டும்’ என்று சொல்லியிருந்தார்.

ரெட் தொகுதி:

மொத்தம் 120 தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகுதிகள் அனைத்துமே வெற்றி பெறக் கடினம் எனக் கண்டறியப்பட்ட ரெட் தொகுதிகள் தான். ஒருசிலருக்கு இரண்டு தொகுதிகள், சிலருக்கு மூன்று, நான்கு தொகுதிகள் வரை பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுதிகளின் வெற்றி தோல்விக்கு நீங்களும் கேள்வி கேட்கப்படுவீர்கள் என்று சொல்லியிருக்கிறார் தலைவர். குறைந்தது வாரத்தில் நான்கு நாள்களாவது தொகுதியில் தங்கி மக்களைச் சந்திக்க வேண்டும். தொகுதி மக்களின் குறைகளைக் கவனமாகக் கேட்டு அதனைப் பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும். இதற்கு மேலாக நாங்கள் செய்த பணிகள் குறித்து 15 நாள்களுக்கு ஒருமுறை தலைவருக்கே அறிக்கை கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தச் சொல்லியிருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

ஏற்கனவே தொகுதி வாரியாக தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்து சட்டமன்ற தேர்தல் பணிகளை வேகப்படுத்தியிருக்கிறார். கூட்டணிக் கட்சிகள் கைவசம் இருக்கும் தொகுதிகள் அருகில் உள்ள திமுக உறுப்பினர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவர்கள் சார்ந்த தொகுதி நிலவரம் தெரியும். நாடாளுமன்ற உறுப்பினர்களும் களத்தில் இணைந்திருப்பது தேர்தல் வெற்றியை எளிதாக்கும். எங்கள் பணிகளைக் கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் தலைமை கழகத்திலிருந்து உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது” என்றார்கள் விரிவாக.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *