• September 23, 2025
  • NewsEditor
  • 0

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக காசா முழுமையாக உருக்குலைந்து காணப்படுகிறது. காசாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வேலையில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேசமயம் காசா போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் முழுவதும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் சில அமைப்புகள் காசா போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டி வருகின்றன.

ஆனால் அவ்வாறு திரட்டப்படும் நிதியை காசா மக்களுக்கு அனுப்பாமல் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் சம்பவங்களும் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மூன்று பேர் இது போன்று காசா போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று கூறி இந்தியா முழுவதும் சமூக வலைதளம் மூலம் நிதி திரட்டி வந்தனர்.

ஜைத் நோட்டியார்

இது தொடர்பாக உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்பு படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார் அவர்கள் மூன்று பேர் குறித்த விபரங்களை சேகரித்தனர். அவர்கள் மும்பை அருகில் உள்ள பீவாண்டி என்ற இடத்தில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து தீவிரவாத தடுப்பு படை போலீஸார் மும்பை வந்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். மூன்று பேரும் ஆன்லைன் மூலம் 50 பரிவர்த்தனைகள் செய்திருப்பது தெரிய வந்தது. மூன்று பேரையும் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை தங்களது காவலில் எடுத்த உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்புபடையினர் அவர்களை உத்தரப்பிரதேசத்திற்கு அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் பெயர்கள் முறையே மொகம்த் அயான்(22), அபு சுபியான்(22), ஜைத் நோட்டியார்(22) என்று தெரிய வந்தது.

இது குறித்து தீவிரவாத தடுப்புப்படை அதிகாரிகள் கூறுகையில், ”மூன்று பேரும் கிரீஸ் நாட்டை சேர்ந்த ஒருவரின் கட்டளையின் கீழ் செயல்பட்டு வந்துள்ளனர். கிரீஸ் நாட்டை சேர்ந்தவர் சொன்னபடி இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ்ஆப் குரூப் மற்றும் இதர சமூக வலைதள பக்கங்களில் காசா மக்கள் மற்றும் குழந்தைகள் சாப்பாடு இல்லாமல் எந்த அளவுக்கு கஷ்டப்படுகின்றனர் என்பது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு மக்களின் உணர்ச்சிகளை தூண்டி காசா மக்களுக்காக நிதி திரட்டியுள்ளனர்.

இதற்காக பொதுமக்களிடம் நன்கொடை பெற யு.பி.ஐ. ஐடி மற்றும் வங்கிக் கணக்குகளை கொடுத்துள்ளனர். அவ்வாறு வசூலாகும் பணத்தை அவர்கள் காசாவில் பாதித்த மக்களுக்கு அனுப்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.

அபு சுபியான்

அப்பணத்தை கிரீஸ் நாட்டில் தங்களை இயக்கி வரும் நபருக்கு பல்வேறு வழிகளில் ஆன்லைன் மூலம் அனுப்பி இருக்கின்றனர். அந்த பணம் மத்திய ஐரோப்பிய நாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

மூன்று பேரும் கடந்த சில வாரங்களில் ரூ.5 கோடி வரை இது போன்று மக்களின் உணர்ச்சிகளை தூண்டி காசாவில் பாதிக்கப்பட்டவர்கள் பெயரை சொல்லி வசூலித்துள்ளனர். மூன்று பேரின் மொபைல் போன்களை ஆய்வு செய்தபோது அவர்கள் கிரீஸ் நாட்டை சேர்ந்தவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோசியல் மீடியா கணக்குகள், பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்திய மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வசூலிக்கப்பட்ட நிதி தீவிரவாத அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர். 3 பேரும் 20 மாநிலங்களில் நிதி திரட்டி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *