
இம்மாத தொடக்கத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், பிரதமர் மோடியின் சுதந்திர தின அறிவிப்பின்படி ஏற்கெனெவே இருந்த வரி விகிதத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி 2.0 வரி விகிதங்கள் நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்தன.
இவ்வாறிருக்க, நேற்று முன்தினம் மோடி தனது உரையில், “அனைத்து மாநில அரசுகளும் சுதேசி திட்டத்திற்குத் தீவிர ஆதரவு அளிக்க வேண்டும்.
`சுதேசி’ என்ற மந்திரம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு எப்படி வலிமை சேர்த்ததோ, அதே மந்திரம் நாட்டின் செழிப்பையும் வலுப்படுத்தும்.
இன்று, தெரிந்தும் தெரியாமலும், பல வெளிநாட்டு பொருள்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. சார்புநிலையிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை நாம் தேர்வு செய்து வாங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமரின் `சுதேசி’ அழைப்பை ஏற்று zoho சாஃப்ட்வேருக்கு மாறியிருக்கிறார்.
இது குறித்து அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “டாகுமெண்ட்ஸ் (Documents), ஸ்ப்ரெட்ஷீட் (Spreadsheets), ப்ரெசென்ட்டேஷன் (Presentations) ஆகியவற்றுக்காக நம் நாட்டின் zoho-வுக்கு நான் மாறுகிறேன்.
பிரதமர் மோடியின் அழைப்பின்படி அனைவரும் இந்திய தயாரிப்புகள் மற்றும் சேவையைப் பயன்படுத்துமாறு அனைவரும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

மத்திய அமைச்சரின் இந்தப் பதிவுக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, “உங்களின் இந்த முன்னெடுப்பு இரண்டு தசாப்தங்களாக கடுமையாக அழைத்து வரும் எங்கள் பொறியாளர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். நம் நாட்டையும், உங்களையும் நாங்கள் பெருமைப்பட வைப்போம்” என்று பதிவிட்டிருக்கிறார்.
அரசு நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை பெரும்பாலான நிறுவனங்களில் தரவுகளைப் பராமரிக்க மைக்ரோசாஃப்ட் எக்செல் (MS EXCEL), கூகுள் ஸ்பிரட்ஷீட் (GOOGLE SPREADSHEET) மென்பொருள் சேவைகள் தான் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு மாற்றாக, இந்திய நிறுவனமான zoho நிறுவனம் `zoho sheet’ என்ற மென்பொருள் சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.