• September 23, 2025
  • NewsEditor
  • 0

புழல் ஏரி

கடலே பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்குப் பரப்பளவு கொண்ட ஏரிதான் நம்ம புழல் ஏரி. இந்த ஏரியில் தண்ணீர் இல்லாமல் போனால், சிங்காரச் சென்னையே தத்தளித்துவிடும்.

மழை பெய்யும் போது புழல் ஏரியைச் சுற்றி இருக்கிற எல்லா இடங்களில் இருக்கிற நீரும், புழல் ஏரிக்குத்தான் போகும். புழல் ஏரியும் போகிற எல்லா நீரையும் ஏற்கும். வராதேன்னு ஒரு வார்த்தைகூட சொல்லாது.

செங்குன்றம் பக்கத்தில் இருக்கிற சோழாவரம் பகுதியில மழைநீர் வடிகாலுக்காகக் கட்டப்பட்ட கால்வாயில் மழைநீருக்கு பதிலாக சாக்கடை நீர் தான் கடந்த இரண்டு வருடமாகப் புழல் ஏரியில போய் கலக்குது.

சுகாதரமற்ற சாக்கடை நீர்

சாக்கடை நீர்

சாக்கடை நீர் கலந்ததால் புழல் ஏரி மாசுபட்டு வருகிறது. இதனால், சுற்றுப்புற நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் துர்நாற்றம் மற்றும் சுகாதார அபாயங்களுக்கு உள்ளாகின்றன.

கடைகள் வாடிக்கையாளர் குறைவினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேரம் மற்றும் சுகாதாரம் பாதிக்கப்படுவதால் மனஅழுத்தத்தை அனுபவிக்கின்றனர்.

சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், புழல் ஏரியில் உள்ள நீர் உயிரினங்கள் அழிந்து போகும், சுற்றுப்புற நிலங்களில் மண் வளம் குறையும், மற்றும் நீர் மாசுபாடு காரணமாக மக்கள் வாழ்வியல் மிகவும் பாதிக்கப்படும்.

சுகாதார அபாயம்

இந்தப் பிரச்னையால் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். மாசுபட்ட நீர் மற்றும் துர்நாற்றம் காரணமாக, மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது சுகாதார அபாயம் அதிகரிக்கிறது.

குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பள்ளிச் சுற்றுப்புறங்களில் துர்நாற்றம் மற்றும் மாசு காரணமாக, மாணவர்களின் உடல்நலத்தையும், கல்வியையும் பாதிக்கும் எனப் பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிக் கவலைப்படுகின்றனர்.

மழைநீர் கால்வாயில் கலக்கும் சாக்கடை நீர்
மழைநீர் கால்வாயில் கலக்கும் சாக்கடை நீர்

துர்நாற்றமிக்க சூழல்

சோழாவரம் பகுதி மற்றும் சுற்றுப்புறங்களில் வாழும் மக்கள் இந்தப் பிரச்னை பற்றிக் பற்றி கூறும் போது,

“இது போன்ற சூழலில் தான் நாங்கள் ரொம்ப நாட்களாக வாழ்ந்து வருகிறோம். புழல் ஏரி மாசுபட்டு, சுற்றுப்புற நிலங்கள் துர்நாற்றமிக்க சூழலை ஏற்படுத்தும் போது, எங்கள் வாழ்க்கை மட்டுமல்ல, குழந்தைகளின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது” என வருத்தம் தெரிவிக்கின்றனர்.

“புகார் கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை”

இது பற்றி அங்கிருந்த கடைக்காரர் ஒருவரிடம் கேட்கும்போது,

“நான் இங்கு ரொம்ப நாளாக கடை நடத்திட்டு வரேன். இந்தக் கால்வாயில் மழைநீரைவிட அதிகமாக சாக்கடை நீர்தான் போகுது.

இதனால் இந்த இடம் முழுவதுமே ரொம்ப துர்நாற்றமாக இருக்கு. இங்கு எங்களால் இருக்க முடியவில்லை. இதனால் நிறைய வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவதே இல்லை. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் ரொம்ப பாதிக்கப்படுது.

நாங்களும் இந்த சாக்கடை நீர் எங்கே இருந்து வருகிறது என்று பார்ப்பதற்காக எங்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றோம். ஆனால் இது பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து வருகிறது. எங்கிருந்து வருகிறது என்றே எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மழைநீர் கால்வாயில் கலக்கும் சாக்கடை நீர்
மழைநீர் கால்வாயில் கலக்கும் சாக்கடை நீர்

இதுபற்றி ஊர்க்காரர்களிடம் சொன்னபோது, அவர்கள் கார்ப்பரேஷனில் புகார் கொடுக்கச் சொன்னார்கள். நாங்களும் புகார் கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரோட்டுக்கு அந்தப் பக்கம் ஆவடி கார்ப்பரேஷனில் வரும் ஏரியா, இந்தப் பக்கம் சோழவரம். அதனால் யாருமே எங்களுடைய பிரச்னையைச் சரி பண்ணித் தர மாட்டிக்கிறார்கள்.

எங்கள் கையெழுத்து போடச் சொன்னாலும் போடுகிறோம். இந்தப் பிரச்சனையைச் சரி பண்ணிக் கொடுங்கள் என்று கவலையுடன் கூறினார்.

“இது எங்கள் ஏரியாவில் வராது”

மழைநீர் கால்வாயைத் தனித்திருத்தம் செய்து மழைநீரை மட்டும் புழல் ஏரிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும். சாக்கடை நீர் கலக்காமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

உரிய அதிகாரிகள் இதனைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மழைநீர் கால்வாய்களை மறு பரிசோதனை செய்து குறைகள் இருந்தால் உடனே சரிசெய்ய வேண்டும்.

மேலும் பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் கடைக்காரர்கள் இணைந்து, புழல் ஏரி மற்றும் அதன் சுற்றுப்புற நிலங்களின் பாதுகாப்புக்குப் பங்களிக்க வேண்டும்.

மழைநீர் கால்வாயில் கலக்கும் சாக்கடை நீர்
மழைநீர் கால்வாயில் கலக்கும் சாக்கடை நீர்

நாங்களும் இந்தப் பிரச்னை குறித்து உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம்.

முதலில் ரெட்ஹில்ஸ் நகராட்சியில் சென்று கேட்டபொழுது, அவர்கள் `இது எங்கள் ஏரியாவில் வராது, நீங்கள் சென்று புழல் நகராட்சியில் விசாரியுங்கள்’ என்று கூறினார்கள்.

பின்பு புழல் நகராட்சி சென்று விசாரித்தபொழுது, `இது புழலில் தனி நகராட்சி, இது சென்னையின் கீழ் வரும்’ என்று கூறினார்கள்.

`சோழாவரம் எந்த நகராட்சியில் வரும் என்று எங்களுக்குத் தெரியாது’ என்று கூறிவிட்டார்கள். நாங்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் எந்தவொரு சரியான பதிலும் கிடைக்கவில்லை.

“இது எங்கள் ஏரியாவில் வராது” என்று எல்லாரும் நிராகரித்துவிட்டார்கள்.

செங்குன்றத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் சோழாவரம் பகுதியில் இருக்கிற இந்த மழைநீர் கால்வாய் எந்தப் பகுதியின் கீழ் வருமோ, உரிய அதிகாரிகள் அதனைக் கவனத்தில் எடுத்துச் சரி செய்ய வேண்டியது அவசியம்.

மழைநீர் செல்லும் கால்வாயில் மழைநீரை மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *